- விழுப்புரம் திருப்பதி அம்மன் கோவில்
- விழுப்புரம்
- திருப்பதி
- அம்மன்
- கோவில்
- மேல்பதி
- மேல்பதி திருப்பதி அம்மன் கோவில்
- விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதியில் நீதிமன்ற உத்தரவு படி 22 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்தினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி நடைபெற்ற தீமிதி திருவிழாவின் போது கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள் மீது மற்றொரு பிரிவினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து சட்டம், ஒழுங்கு பிரச்சனை காரணமாக அதே ஆண்டு ஜூன் மாதம் கோயில் பூட்டப்பட்டது.
கோயிலை திறக்க வேண்டும் என இருதரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி 20ம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த மாதம் 19, 20ம் தேதிகளில் விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினரும் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கோயிலை சுத்தம் செய்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட பின்னர் பட்டியல் சமூக மக்களை கோயிலுக்குள் அழைத்து செல்வது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கேமரா பொருத்தும் பணி நிறைவடைந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 5.40 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. இதையடுத்து 7 மணியளவில் 60க்கு மேற்பட்ட பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். மாற்று சமூகத்தை சேர்ந்த சிலரும் கோயிலில் வழிபட்டனர்.
அதே சமயம் வெள்ளி கிழமையான நாளை தங்களுக்கு உகந்த நாள் என்றும் அப்போது கோயிலில் வழிபாடு நடத்தவுள்ளதாகவும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். வழிபாட்டிற்கு பிறகு கோயில் காலை 7.45 மணியளவில் மூடப்பட்டது. இனி தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு 7.30 மணிக்கு கோயில் மூடப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதனிடையே பட்டியலின மக்கள் வழிபாட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
The post விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயில் திறப்பு.. 22 மாதங்களுக்கு பிறகு மேல்பாதி பட்டியலின மக்கள் தரிசனம்!! appeared first on Dinakaran.
