×

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக ஆணவக்கொலைகளை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரகாஷ் அம்பேத்கர் கோரிக்கை

சென்னை: அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் விழா நடைபெற்றது. இதில் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மேடையில் பேசியதாவது: சாதி ஒழிப்பது என்பது வெறும் சாதியை சார்ந்தது இல்லை, அது ஒரு நாட்டை வளர்ப்பது ஆகும். அது இல்லாத காரணம்தான் இந்தியா 2000 ஆண்டுகளாக வளராமல் உள்ளது. அம்பேத்கர் சொன்னது போன்று இறையியல் சாதிய அமைப்பை ஆதரிக்கிறது.

சாதிய அமைப்பு மிருகத்தனம். அந்த சாதிய அமைப்பை அகற்றவில்லை என்றால் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை உருவாக்க முடியாது. ஏப்ரல் 14ம் தேதியை சமத்துவ நாளாக மாற்றியதற்காக முதலமைச்சருக்கு நன்றி கூறுகிறேன். இந்தியா இரண்டாக பிரிந்து உள்ளது. மேலே உள்ள இந்தியா, கீழே உள்ள இந்தியா. கீழே உள்ள இந்தியாவில் முற்போக்கான மாநிலங்கள், மாறிவரும் மாநிலங்கள் மற்றும் சமூகத்தின் புதிய வடிவத்தை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்கள் உள்ளன.

தேசிய இயக்கத்தில் தலைமையாக தென் மாநிலங்கள் உள்ளன. வட மாநிலங்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. தற்போது ஆணவக் கொலை பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. குற்றங்கள் குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் குறைந்த அளவில் ஆணவக் கொலை நடைபெற்று உள்ளது. ஆணவக் கொலையைத் தடுக்க எந்த ஒரு சட்டமும் இல்லை. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணவக் கொலையைத் தடுக்க தமிழகத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாடு அரசு சட்டத்தை வகுத்தால், அது மற்ற மாநிலங்கள் வழிகாட்டுதலாக இருக்கும். ஆணவக் கொலை மனித வாழ்க்கையின் அங்கமாக மாறியுள்ளது. அம்பேத்கர் சொன்னது போன்று சாதி நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கக் கருத்தை அழிக்கிறது. அதிகரித்து வரும் ஆணவக் கொலை சாதிய சமூகத்தை பராமரிக்கிறது. நாடு வளர வேண்டும் என்றால் புதிய அரசியலமைப்பு ஒழுக்கம், புதிய சட்டங்களின் தொகுப்பை உருவாக்க வேண்டும். ஆனால் கார்ப்பரேட் இந்த நாட்டை ஆள விட கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக ஆணவக்கொலைகளை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரகாஷ் அம்பேத்கர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,India ,Prakash Ambedkar ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Ambedkar ,Equality Day ,Kalaivanar Arangam ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...