சென்னை: அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (ஏப்ரல் 16) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்துள்ளது. ‘கோவா’ தேர்வு எனப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜுன் மாதம் இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 16ம் தேதி தொடங்குகிறது.
தேர்வு கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.dte.tn.gov.in) காணலாம். தமிழக அரசு துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்காக நடத்தப்படும் குருப்4 தேர்வுக்கு யாரும் உரிய தொழில்நுட்பக் கல்வித்தகுதி (தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து) விண்ணப்பிக்கலாம் என்றாலும் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டால் அவர்கள் தங்களின் தகுதிக்காண பருவத்துக்குள் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அவர்களின் பதவி பணிவரன்முறை செய்யப்படும்.
அதேபோல், தமிழக அரசின் சுற்றுலா துறையில் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆகிய பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்கவே முடியும். மேலும், தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர் , உதவியாளர் பதவிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
The post அரசு கணினி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.
