×

அதிமுகவை மெல்ல மெல்ல அழிக்க பாஜ உத்தியை கையாளுகின்றது: திருமாவளவன் பேச்சு

கும்பகோணம்: அதிமுகவை மெல்ல மெல்ல தேய வைப்பது, கரைய வைப்பது, நீர்த்து போக செய்வது, அழிப்பது போன்ற உத்தியை பாஜ கையாளுகின்றது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நுழைவாயிலில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் உருவ சிலைகள் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்தனர். விழாவில் திருமாவளவன் பேசியதாவது: விடுதலை சிறுத்தைகளுக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் மகத்தானது. அதனை பாதுகாக்க வேண்டும். பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கை அரசியல் முதன்மையானது.

அதனை பாதுகாக்க வேண்டும். வரும் 2026 நமக்கு ஒரு சோதனை. சோதனை என்றால் அவர்கள் திராவிட அரசியலை வீழ்த்துவோம் என்று சொல்கிறார்கள். இது திராவிட அரசியலை வீழ்த்துவது அல்ல. ஒட்டுமொத்தமாக சமூக நீதி அரசியலை வீழ்த்துவதற்கான முயற்சி. அதிமுகவோடு இன்றைக்கு கூட்டணி அமைத்து 50, 60 தொகுதிகளுக்கு மேலே அடாவடியாக தட்டிப்பறித்து, அதிலே போட்டியிட்டு அதிமுக வாக்குகளை எல்லாம் பெற்று, அது எங்களின் வாக்குகள் என்று காட்டிக் கொள்கிற முயற்சியில் பாஜ ஈடுபடுகிறது.

அதன் மூலம் அதிமுகவை மெல்ல மெல்ல தேய வைப்பது, கரைய வைப்பது, நீர்த்து போக செய்வது, அழிப்பது, வீழ்த்துவது என்கிற உத்தியை கையாளுகின்றனர். திமுக தன்னை தற்காத்துக் கொள்ளும் வலிமையோடு தான் களத்தில் நிற்கிறது. 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post அதிமுகவை மெல்ல மெல்ல அழிக்க பாஜ உத்தியை கையாளுகின்றது: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,Thirumavalavan ,Kumbakonam ,VVIP ,Periyar ,Ambedkar ,Kumbakonam State Transport Corporation… ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...