×

மீண்டும் டெல்லி பயணமா? ‘மவுனம் அனைத்தும் நன்மைக்கே’: செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: ‘மவுனம் அனைத்தும் நன்மைக்கே’ என நிருபர்கள் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணியை உருவாக்க டெல்லி பாஜ முயன்று வருகிறது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜவுடன் கூட்டணி இல்லை என கூறி வந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக கடந்த மாதம் 25ம் தேதி திடீரென டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக-பாஜ கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்த எடப்பாடி அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.

டெல்லியில் இருந்து திரும்பிய அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சொல்வோம் என கூறினார். எடப்பாடி பழனிசாமியுடனான பேச்சுவார்த்தை டெல்லி பாஜ மேலிடத்துக்கு தகுந்ததாக அமையவில்லை. இதனால் மாஜி அமைச்சர் செங்கோட்டையனை முன்னிறுத்தி அதிமுகவை மீண்டும் உடைக்கும் திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக செங்கோட்டையன் டெல்லி சென்று அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இதனால் அதிமுகவினரிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் செங்கோட்டையன் மீண்டும் இரவு டெல்லி பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. நேற்று இரவு அவர் கோபியில் இருந்து கார் மூலம் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தார். பின்னர், ஈரோட்டில் இருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார். முன்னதாக, நிருபர்கள் அவரை பின்தொடர்ந்து சென்று, ‘‘நீங்கள் டெல்லிக்கு போகிறதாக சொல்லிக்கொண்டிருந்தார்களே?’’ என கேட்டதற்கு செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை. பின்னர் மீண்டும் நிருபர்கள், ‘‘தொடர்ச்சியாக நீங்கள் ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்? காரணம் என்ன?’’ என கேட்டபோது, ‘மவுனம் அனைத்தும் நன்மைக்கே’ என ஒரே வரியில் பதிலளித்துவிட்டு சென்றார்.

The post மீண்டும் டெல்லி பயணமா? ‘மவுனம் அனைத்தும் நன்மைக்கே’: செங்கோட்டையன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Sengottaiyan ,Erode ,Former minister ,Delhi BJP ,AIADMK- ,BJP ,2026 assembly elections ,Tamil Nadu ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,BJP… ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...