×

அண்ணாவையும் மறந்து விட்டீர்கள்; தாயையும் மறந்து விட்டீர்கள்: அதிமுக எம்எல்ஏக்கள் மீது அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கோவில்பட்டி கடம்பூர் ராஜு (அதிமுக) பேசுகையில், அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கமே எம்ஜிஆர் கணக்கு கேட்டதால் துவங்கப்பட்ட இயக்கம். நாங்கள் 2026ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, எங்கள் கணக்கை அண்ணன் எடப்பாடியார் தலைமையிலே மீண்டும் தொடங்குவோம் என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: கணக்கை கேட்டு கட்சி ஆரம்பித்தவர்கள் இப்போது, தப்புக் கணக்கு போடுகிறார்கள் என்பதுதான் என்னுடைய பதில்.

அமைச்சர் ஐ.பெரியசாமி: அம்மா ஆட்சி காலத்தில் நாங்கள் பஞ்சாயத்திற்கு ஒரு டி.வி. கொடுத்தோம் என்று உறுப்பினர் சொன்னார். நீங்கள் பஞ்சாயத்திற்கு ஒரு டிவி தான் கொடுத்தீர்கள். ஆனால் கலைஞர் முதல்வராக இருந்தபோது, தமிழகத்திலே இருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரமான டிவி கொடுத்து, 30 வருடங்களாக எல்லாருடைய வீட்டிலும் அந்த டிவி இன்றுவரைக்கும் பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக தாய் திட்டத்தை பற்றி சொன்னார். தாய் திட்டம் எப்படி வந்ததென்று சொல்கிறேன். கலைஞர் இருந்த காலத்திலே ‘அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ என்று அண்ணாவின் பெயராலே ஒரு அழகான திட்டத்தை கொண்டுவந்து, ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும், ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு பஞ்சாயத்து கிராம ஊராட்சிக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்கி, அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வழங்கி சிறப்பித்தார். அதற்கு பின்னால், இவர்கள் அதனை தாய் திட்டம் என்று மாற்றினார்கள். இப்போது அவர்கள் தாயையே மறந்துவிட்டார்கள்; அந்த திட்டத்தை விட்டுவிட்டார்கள். 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரைக்கும் தாய் திட்டம் எங்கு சென்றது? அதைத்தான் கடம்பூர் ராஜூவிடம் கேட்கிறேன்.

எஸ்.பி.வேலுமணி (அதிமுக): நிதி அமைச்சர் கணக்கை பற்றி சொன்னார்கள். எப்போதும் அம்மாவும் சரி, எம்.ஜி.ஆரும் சரி, எடப்படியாரும் சரி, போட்டக் கணக்கு சரியாக இருக்கும். அந்த கணக்கை கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாகத்தான் வரும்.

அமைச்சர் ஐ.பெரியசாமி: உங்கள் கட்சியின் பெயரே அண்ணா திமுக என்று உள்ளது. ஏன் நீங்கள் அண்ணாவினுடைய பெயரை எடுத்துவிட்டு அதை மாற்றுனீர்கள். சரி. தாய் என்று பெயர் வைத்தீர்கள். தாய், தாய் என்று சொல்கிறீர்களே, தாயையே மறந்தவர்கள் நீங்கள். அதை அப்படி ஏன் மாற்றினீர்கள்? திட்டத்தையே கைவிட்டீர்களே. தாயின் பெயரால் வைத்த திட்டத்தையே கைவிட்டவர்கள். அண்ணாவையே மறந்து விட்டீர்கள். தாயையே மறந்துவிட்டீர்கள். உங்களுக்கு எந்த கதியும் இல்லை. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் என்று வைத்து ரூ.12,484 ஊராட்சிகளிலும் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு இதுவரைக்கும் 4,200 கோடி செலவிடப்பட்டு இந்தாண்டிற்கு ரூ.1,254 கோடி ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post அண்ணாவையும் மறந்து விட்டீர்கள்; தாயையும் மறந்து விட்டீர்கள்: அதிமுக எம்எல்ஏக்கள் மீது அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Anna ,Minister ,I. Periyasamy ,AIADMK ,Rural Development and Panchayat Department ,Assembly ,Kovilpatti Kadambur Raju ,MGR ,Dinakaran ,
× RELATED மொழி, இனம், பண்பாடு சிதைந்து விட்டால்...