×

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் ரூ.311.78 கோடி மதிப்பீட்டில் புதிய எல்.இ.டி தெருவிளக்குகள்: அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் ரூ.311.78 கோடி மதிப்பீட்டில் புதிய எல்.இ.டி தெருவிளக்குகள் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் கே.என். நேரு நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். விவரம் பின்வருமாறு: கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்களும், ஈரோடு மாநகராட்சி ஆற்காடு, ராணிப்பேட்டை நகராட்சிகளின் பேருந்து நிலையங்களில் கூடுதல் பணிகளும் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

கடலூர், தஞ்சாவூர் மாநகராட்சிகள், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி,விருதுநகர் ஆகிய நகராட்சிகளிலுள்ள பேருந்து நிலையங்கள் ரூ.84.26 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். கரூர், கும்பகோணம், தாம்பரம், திருநெல்வேலி மாநகராட்சிகள், அரக்கோணம், ஆத்தூர், ஆற்காடு, ராமேஸ்வரம், எடப்பாடி, கள்ளக்குறிச்சி, கொமாரபாளையம், செங்கோட்டை, திருப்பத்தூர், திருவில்லிபுத்தூர், திருவேற்காடு, தென்காசி, நெல்லிக்குப்பம், துவாக்குடி, பண்ருட்டி, பூந்தமல்லி, பொள்ளாச்சி, மறைமலைநகர். வாணியம்பாடி, வெள்ளக்கோவில், உளுந்தூர்பேட்டை ஆகிய நகராட்சிகளில் ரூ.704.76 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்படும்.

வால்பாறை நகராட்சியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் அமைக்கப்படும். மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பசுமைவெளிகளை அதிகரிக்கும் நோக்கில், இந்த ஆண்டு ரூ.27.26 கோடி மதிப்பீட்டில் 50 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் ரூ.311.78 கோடி மதிப்பீட்டில் 69,500 புதிய எல்.இ.டி தெருவிளக்குகள் அமைக்கப்படும். 45,700 பழைய தெருவிளக்குகள் புதிய எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்படும்.
இந்த ஆண்டு ரூ.19.53 கோடி மதிப்பீட்டில் 25 நீர்நிலைகளின் கரைகள் பலப்படுத்தி நடைபாதைகள், பசுமைவெளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

மேலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள கொட்டப்பட்டு ஏரி, கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள ஏவிஎம் கால்வாய், மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் நகராட்சிகளில் அமைந்துள்ள அனைத்து நீர்நிலைகளும் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் ரூ.95.35 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். சுற்றுலாத்தலமான வால்பாறை நகராட்சியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும். கடலூர் மாநகராட்சி, ராமநாதபுரம், காயல்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவத்திபுரம், பரமக்குடி, விழுப்புரம் நகராட்சிகளில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன இறைச்சிக் கூடங்கள் அமைக்கப்படும். மேலும், அருப்புக்கோட்டை மற்றும் மேட்டூர் நகராட்சிகளில் உள்ள இறைச்சிக் கூடங்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

தெரு நாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் பொருட்டு நகர்ப்புர உள்ளாட்சிகளில் விலங்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். இந்த ஆண்டு ரூ.27.47 கோடி மதிப்பீட்டில் கடலூர், ஓசூர். தூத்துக்குடி, தாம்பரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாநகராட்சிகள், சிவகங்கை, விருதுநகர், உதகமண்டலம், மறைமலைநகர், பெரம்பலூர், அரியலூர், திருவத்திபுரம் நகராட்சிகளில் புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும். தஞ்சாவூர். காஞ்சிபுரம் மாநகராட்சிகள், வேதாரண்யம், அருப்புக்கோட்டை, விழுப்புரம், திருநின்றவூர், புகளூர் ஆகிய நகராட்சிகளிலுள்ள எரிவாயு தகன மேடைகள் மேம்படுத்தப்படும்.

புதிதாக உருவாக்கப்பட்ட நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை மாநகராட்சிகளில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய மண்டல அலுவலகங்கள் கட்டப்படும்.மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பள்ளிகளுக்குத் தேவையான புதிய வகுப்பறைகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.87.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டிடங்கள் ரூ.52.26 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
தாம்பரம் மாநகராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க முதற்கட்டமாக தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.750 கோடியும், விருதுநகர் நகராட்சிக்கு ரூ.50 கோடியும், தேசிய வீட்டு வசதி வங்கி மற்றும் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

கடலூர் மாநகராட்சி தருமபுரி, அருப்புக்கோட்டை நகராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் நீரினை மறுசுத்திகரிப்பு செய்து தொழிற்சாலைகளில் பயன்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி ஆகிய 3 தேர்வு நிலை நகராட்சிகளை சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம் ஆகிய 3 முதல்நிலை நகராட்சிகளை தேர்வுநிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய 5 இரண்டாம் நிலை நகராட்சிகளை முதல் நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

The post தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் ரூ.311.78 கோடி மதிப்பீட்டில் புதிய எல்.இ.டி தெருவிளக்குகள்: அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,K.N. Nehru ,Chennai ,Tamil Nadu Municipal Administration and Drinking Water Supply Department ,Minister… ,Minister K.N. Nehru ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...