×

ரசிகர்களை விஜய் சந்திக்காவிட்டால் தவெக சீமான் கட்சி போலாகும்: நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து: பாஜ மீதும் தாக்கு

கும்பகோணம்: பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று கும்பகோணம் வந்தார். அப்போது ரயில் நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழே 10 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். அவர்கள் நலனுக்காக நல வாரியம் அமைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

அவ்வாறு முதல்வர் நலிவடைந்த பிராமணர்களுக்காக நல வாரியம் அமைத்தால் நிச்சயம் அவர்களின் 5 லட்சம் வாக்குகள் திமுகவிற்கு கிடைக்க செய்வேன். பிராமண சமூகத்தை பாதுகாக்க போவதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறிவருகிறார். அவர், முதலில் அவரது சமூகத்தை பாதுகாக்கட்டும். அப்புறமாக பிராமணர் சமூகத்திற்கு வரட்டும். பிராமணர்கள் யாரும் அவரிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடையவில்லை.

ஒரு நடிகர் ஹீரோவாக இருக்கும் போது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அதே நடிகர் கட்சித் தலைவர் ஆகிறார் என்றால் ரசிகர்கள் அனைவரும் தொண்டராவார்களா என்பது கேள்விக்குறி. எனவே நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். ரசிகர்களை சந்திக்க வேண்டும். இல்லையெனில் அவரது கட்சி சீமான் கட்சி போல் ஆகும். தமிழகத்தில் பாஜ பலூன் போல் உள்ளது. பலூன் போல் பெரிதாக இருந்தால் வலுவானது என அர்த்தம் இல்லை.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். திமுக தலைமை கேட்டுக்கொண்டால் திமுகவிற்காக பிரசாரம் செய்வேன். ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இனி நான் சேரப்போவதில்லை. நாடாளுமன்ற மறு சீரமைப்பின் போது வட மாநிலங்களுக்கு எந்த விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் வழங்கப்படுகிறதோ, அதே விகிதாச்சாரப்படி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post ரசிகர்களை விஜய் சந்திக்காவிட்டால் தவெக சீமான் கட்சி போலாகும்: நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து: பாஜ மீதும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Vijay ,Thaveka Seeman Party ,SV Shekhar ,BJP ,Kumbakonam ,Swami ,Brahmins ,Tamil Nadu ,
× RELATED மறைந்த ஒன்றிய அமைச்சர்...