×

சைதாப்பேட்டை முதல் திரு.வி.க நகர் பாலம் வரை அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் விராலிமலை விஜயபாஸ்கர் (அதிமுக) பேசியதாவது: அடையாறு நதி சீரமைப்பு குறித்து கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றை சீரமைக்க மொத்தம் ரூ.4,500 கோடி ஒதுக்கியுள்ளீர்களா? இல்லை. ரூ.1,500 கோடியா?
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அடையாறு ஆற்றை சீர் செய்வதற்கு இந்த பட்ஜெட்டில் ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 10 ஆயிரம் குடும்பங்களுக்கு முழுவதுமாக மறு குடியிருப்பு வழங்கும் பணிகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பணி முடிந்தவுடன் விரைவாக அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது சைதாப்பேட்டை முதல் திரு.வி.க நகர் பாலம் வரை அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர்: ஒவ்வொரு ஆண்டும் கடன் அதிகளவில் வாங்கப்படுவதால், ஒவ்வொருவரின் தலைக்கு மேல் அதிக கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: அதிமுக ஆட்சியில்தான் அதிக கடன் வாங்கப்பட்டது.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: 2020-2021ம் ஆண்டு அதிக கடன் வாங்கியதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அப்போது கொரோனா காலம். வரி வருவாய் இல்லை. ஊரடங்கு அமலில் இருந்தது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: கொரோனாவால் கடன் வாங்கியதாக அதிமுகவினர் கூறுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தபோதும் கொரோனா இருந்தது.
எடப்பாடி பழனிசாமி: உங்கள் ஆட்சியில் லாக்டவுன் கிடையாது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: நீங்கள் ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்து நிதி வாங்கினீர்கள். நாங்கள் ஒன்றிய அரசுடன் உரிமை போராட்டம் நடத்தி வருவதால், அங்கிருந்து எங்களுக்கு நிதி வரவில்லை. எனவே அவர்களுடன் போராட்டம் நடத்துகிறோம், கடன் வாங்குகிறோம்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: திமுக ஆட்சிக்கு வந்தும் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருந்தது. நிவாரணத்திற்கு அதிக நிதி செலவிடப்பட்டது. மற்ற மாநிலங்கள் பொருளாதார சரிவு இருந்த போது, தமிழகத்தில் ஏற்படாமல் அப்போது தடுத்தோம்.

* அதிக மருத்துவ கல்லூரி வர காரணம் திமுக தான்
விஜயபாஸ்கர் (அதிமுக): முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை பல மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு மருத்துவ கல்லூரி திட்டம் என்ன ஆனது? கடந்த 4 ஆண்டுகளில் ஒரு மருத்துவ கல்லூரி கூட தொடங்கப்படவில்லை.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: இந்தியாவிலேயே தமிழகம் முதல்வர் விரிவான காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை 2011ல் கலைஞர் இந்தியாவிற்கு வழிகாட்டியாக மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது. நீங்கள் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கியதாக கூறுகிறீர்கள். நாகை, நாமக்கல் மருத்துவ கல்லூரிகளில் தண்ணீர் வசதி இல்லை.அதற்கு ரூ.400 கோடி செலவில் அவை சரி செய்யப்பட்டுள்ளது, நீலகிரியில் வரும் 5ம் தேதி மருத்துவ கல்லூரி திறக்கப்படுகிறது. தமிழகத்தில் இவ்வளவு மருத்துவ கல்லூரிகள் பயன்பாட்டிற்கு வர காரணம் திமுக ஆட்சியில் வழங்கிய நிதி ஆதாரம் தான். இவ்வாறு அவர் கூறினார்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சகோதரர்களுக்கு கட்டுமான ஒப்பந்தங்கள் முறையாக வழங்கப்படுகிறது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதம் பின்வருமாறு: காட்டுமன்னார்கோவில் சிந்தனை செல்வன் (விசிக): டெண்டர் வெளிப்படைத்தன்மையாக நடைபெறுவதற்கு சட்டத்தை அரசு கொண்டுவந்தது. இதில் பல்வேறு விதிமுறைகள் இருப்பதால் பட்டியலின மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே, அந்த சட்டத்தினை தளர்த்த வேண்டும்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சகோதரர்களுக்கு முறையாக ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டு தான் வருகின்றன. இதுமட்டுமின்றி, தாட்கோ மூலமாக நடைபெறுகின்ற பெரும்பான்மையான கட்டிட பணிகளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு அதனை நிறைவாக செய்துகின்றனர். எனவே, உறுப்பினர் விண்ணப்பம் அளிக்க முடியாமலும், பதிவு செய்யப்படாமலும் இருக்கும் நபர்களின் விவரங்களை கொடுத்தால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post சைதாப்பேட்டை முதல் திரு.வி.க நகர் பாலம் வரை அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Saithapet ,Adiyaru River ,Gannagar Bridge ,Minister ,Subramanian ,Viralimalai Vijayabaskar ,Adimuka ,Legislative Assembly ,Adiyaaru River ,Ma. ,mr. V. Work ,Dinakaran ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...