×

2 மாவட்டத்தில் 101 டிகிரி வெயில்

 

சென்னை: தமிழகத்தில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக கரூர், மதுரை மாவட்டங்களில் நேற்று 101 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து, 20ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ெ தரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் வெயில் மற்றும் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு நிலையில் வெயில் இருந்தாலும் ஒருசில இடங்களில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கரூர், மதுரை மாவட்டங்களில் நேற்று 101 டிகிரி வெயில் கொளுத்தியது.வெப்பநிலையை பொருத்தவரையில் ஈரோடு, ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும் வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இருந்து குமரிக் கடல் பகுதிகள் வரையில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் மற்றும் தென் கிழக்கு அரபிக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை நேற்று பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் நீலகிரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். பிற பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.

மேலும், நாளை முதல் 20ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இது தவிர, இன்று முதல் 19ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இயல்பைவிட ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது. சில இடங்களில் இயல்பைவிட சற்று கூடுதலாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,Karur ,Madurai ,Chennai Meteorological Department ,
× RELATED நாவலூரில் காஸ் கசிவால் பயங்கரம்:...