×

அதிமுக என்ற கட்சியோடு சேர்த்து மனசாட்சியையும் பழனிசாமி பாஜவிடம் அடகு வைத்துவிட்டார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

 

சென்னை: அதிமுகவுடன் சேர்த்து தனது மனசாட்சியையும் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். சென்னை அமைந்தகரையில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு நடத்திய ‘பேரன்பின் ஈகைப் பெருவிழா புனித ரமலான் நோன்பு திறப்பு’ நிகழ்வில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள்தான். மகளிர் நலனை முன்வைத்துதான் ஏராளமான நலத்திட்டங்களை நாம் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அந்த ஜமாத் மாநாட்டில் நான் பேசும்போது, முஸ்லிம் பெண்கள்தான் அதிகமாகக் கைதட்டி அதை வரவேற்றார்கள்.

பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. அதிலும், இஸ்லாமிய சகோதரிகள் நம்முடன் இருக்கும்போது, நம்முடைய பலம் இன்னும் பல மடங்கு பெருகிவிடும். அனைத்துச் சிறுபான்மை இயக்கங்களும் ஒரே மேடையில் சேர்ந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு, இதுபோன்று இருந்ததா என்றால், இல்லவே இல்லை. இந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது தி.மு.க. இந்த ஒற்றுமைதான், தமிழ்நாட்டுக்கும் அவசியம்.

ஏன், இந்திய நாட்டுக்கும் அவசியம். ஆனால், அப்படியே இதற்கு நேர்மாறான நிலைமை, பா.ஜ. ஆளும் மாநிலங்களில் இருந்து வருகிறது.
நாடு முழுவதும் நடக்கும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை பற்றி, இன்றைக்கு இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஏதாவது கருத்து சொன்னாரா? பழனிசாமியிடம் நாம் கேட்பதெல்லாம் அ.தி.மு.க. என்ற கட்சியுடன் சேர்த்து, உங்கள் மனசாட்சியையும் பா.ஜ.விடம் அடகு வைத்துவிட்டீர்களே அதுதான் வேதனையாக இருக்கிறது. சிறுபான்மையினர் மீதான வெறுப்பு நெருப்பை தூண்டிவிட்டு, அதில் குளிர்காயும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்கள் எப்படி அவர்களின் உரிமையையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Palaniswami ,AIADMK ,BJP ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Edappadi Palaniswami ,Beranpin Eigai Peruvizah Holy Ramadan Fast Opening ,DMK Minority Welfare Unit ,Ameenkarai, Chennai… ,
× RELATED நாவலூரில் காஸ் கசிவால் பயங்கரம்:...