×

கரூரில் 41 பேர் பலியான விவகாரம்: நடிகர் விஜய்யிடம் 7 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை: டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி

 

சென்னை: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய்யின் பிரசார பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில், சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியதுடன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர். அதேப்போன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து கரூர் கூட்ட நெரிசலில் நசுங்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு முறை சம்மன் அனுப்பி சிபிஐ தரப்பில் விசாரிக்கப்பட்டது. அதாவது ஜனவரி 15ம் தேதி ஒருநாளும், இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்கள் என்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டதால், நேற்று காலை 11மணி அளவில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் நேரில் ஆஜரானார். இதையடுத்து அவரிடம் சிபிஐ எஸ்.பி சுனில் குமார் தலைமையிலான அதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில்,‘‘தவெக கட்சியின் பொதுக்கூட்டம் நடத்த வெளிநாடுகளில் இருந்து பணம் பெறப்பட்டதா?, அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதற்கான கணக்கீட்டு விளக்கம் நிலவரம் மிகவும் மோசமானதாக நீடித்தது, கண் எதிரே இருந்த உங்களுக்கு தெரியவில்லையா?.

சூழலை புரிந்து கொண்டு அபாயத்தை தடுத்திருக்க வேண்டாமா?. குறிப்பாக பிரச்சார கூட்டத்திற்கு தாமதமாக நிங்கள் ஏன் வந்தீர்கள். உங்களுக்கு பிரச்சார நேரம் கொடுக்கப்பட்டது என்பது பிற்பகல். அதனை கடைபிடிக்காமல் தாமதமாக வந்தது ஏன்? என்று துருவி துருவி கேள்விகள் கேட்டனர். சுமார் 7 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு மாலை 6:20 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்.
அப்போது, காரின் சன் ரூப் வழியே ஏறி நின்ற விஜய் சிபிஐ அலுவலகத்தில் இருந்து கையை அசைத்தபடி வெளியே வந்தார். இன்று எந்த வித விசாரணையும் இல்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Karur ,Vijay ,CBI ,Delhi ,Chennai ,Tamil Nadu Victory Party ,Velusamypuram, Karur district ,
× RELATED நாவலூரில் காஸ் கசிவால் பயங்கரம்:...