×

திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விடுவிக்க கோரிய எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்ன: திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதால் அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது தயாநிதி மாறன் எம்பி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி எடப்பாடி பழனிசாமி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், அவதூறு வழக்கு நீதிபதி சஞ்சய்பாபா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனுவை வாபஸ் பெறுவதாக அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேவேளையில் பிரதான வழக்கான அவதூறு வழக்கை ஏப்ரல் 9ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விடுவிக்க கோரிய எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DMK ,Dayanidhi Maran ,Chennai ,special court ,Edappadi Palaniswami ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami… ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...