×

பயணிகளின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு; திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு சேவை அதிகரிப்பு

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து அதிகப்படியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை கையாண்டு வருகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். உள்நாட்டு விமான சேவையை பொறுத்தவரை சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து மாதத்திற்கு 77 உள்நாட்டு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சி தற்போது அதிவிரைவாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. இங்கிருந்து பணி, தொழில், கல்வி உட்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் பெருநகரங்களுக்கு சென்றவர துவங்கிவிட்டனர். அதற்கு ஏதுவாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெருநகரங்களுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி – சென்னையிடையே ஒரு விமான நிறுவனம் மட்டும் சேவை வழங்கி வந்தது. 2025ம் ஆண்டு துவங்கியது முதலே திருச்சி – சென்னை இடையே தினசரி பயணிகள் போக்குவரத்து பன்மடங்காக உயர்ந்தது. பயணிகளும் திருச்சி- ெசன்னைக்கு விமான சேவையை அதிகரிக்க இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இந்த வழித்தடத்தில் விமானத்தை இயக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முன்வந்தது. மார்ச் 22ம் தேதி முதல் திருச்சி – சென்னை வழித்தடத்தில் விமானத்தை இயக்க முடிவு செய்தது. அதற்கு ஏற்றார்போல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் மளமளவென விற்றுத்தீர்ந்தது.

இதேபோல் திருச்சி – மும்பை வழித்தடத்திலும் விமான சேவை அதிகரிக்க கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது இந்த வழித்தடத்தில் சேவை வழங்க அதே ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. வாரத்திற்கு 3 முறை மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த சேவை தற்போது 4 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்ச் 30ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு 7 முறை சேவைகள் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் வாரத்திற்கு உள்நாட்டு விமான சேவைகள் 77ல் இருந்து 98 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உள்நாட்டில் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை விமான சேவை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு தற்போது உள்நாட்டு விமான சேவையை ஊக்குவிக்கும்விதமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த அறிவிப்புகளை தொடர்ந்து டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய பெருநகரங்களுக்கும் விமான சேவைகள் வழங்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

The post பயணிகளின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு; திருச்சி விமான நிலையத்தில் உள்நாட்டு சேவை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy airport ,Trichy ,Trichy International Airport ,Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...