சென்னை: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி சென்னை மெரினாவில் நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதனை ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை பொதுமக்கள் காணும் வகையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தா மாளிகைக்கு எதிரிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் போலீஸ் பூத் அருகிலும் மெகா டிஜிட்டல் திரை அமைத்து திரையிடப்பட்டது.
இந்த போட்டியை காண ஆர்வமுடன் நேற்று பிற்பகல் முதல் 2 இடங்களுக்கும் வர தொடங்கினர். முதலில் நியூசிலாந்து அணி பேட் செய்ததால் சற்று கூட்டம் குறைவாக இருந்தது. நேரம் ஆக, ஆக போட்டி விறுவிறுப்படைந்தது. அதே நேரத்தில் போட்டியை காண வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து மணற்பரப்பில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தனர்.
இந்திய வீரர்கள் விக்கெட் எடுக்கும் போது கைத்தட்டி தங்களுடைய ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இரண்டாவது பேட்டிங்கை இந்தியா தொடங்கியது. அப்போது மணற்பரப்பு முழுவதும் பொதுமக்களாக காட்சியளித்தை காண முடிந்தது. இந்திய வீரர்கள் ரன்கள் அடிக்கும் போது கைத்தட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரவு போட்டி முடியும் வரை மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. போட்டியை கண்டு களித்தவர்கள் நிறைய பேருடன் போட்டியை அதுவும் மெரினா காற்றை அனுபவித்து கொண்டு பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.
The post இந்தியா, நியூசிலாந்து மோதிய இறுதி போட்டி சென்னை மெரினாவில் ஒளிபரப்பு: ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து கண்டு ரசித்தனர் appeared first on Dinakaran.
