மதுரை: தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் அதிமுக பிரமுகர்கள் மதுரை மாநகராட்சி பகுதிகளில் அதிமுக கொடிக் கம்பங்கள் நடுவதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இளந்திரையன், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடிக்கம்பங்கள் வைக்க கூடாது. கொடிக் கம்பங்களை வைப்பதால் விபத்து மற்றும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே ஏப்ரல் மாதத்திற்குள் கொடிக் கம்பங்களை தமிழக அரசு முற்றிலும் அகற்ற வேண்டும். அகற்றாத பட்சத்தில் கொடிக் கம்பங்களை அகற்றி அதற்கான செலவை அந்தந்த அரசியல் கட்சி பிரமுகர்களிடமே பெற்று கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை சேர்ந்த அமாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசியல் கட்சி கொடிக் கம்பங்கள் நடுவது ஜனநாயக கடமை. தங்கள் கட்சிகள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே கொடிக் கம்பங்கள் நடப்படுகின்றன. எனவே தனி நீதிபதி உத்தரவு தவறானது. எனவே அதனை ரத்து செய்து கொடிக் கம்பங்கள் நடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவானது நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்; அரசியல் கட்சிகள் தங்கள் அலுவலகங்களில் கொடிக் கம்பம், கட்சி கொடிகளை வைத்துக் கொள்ளுங்கள்; சாலைகளை பயன்படுத்த வேண்டாம். நெடுஞ்சாலைகளில் கட்சிக் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், கொடிக் கம்பங்கள் வைக்க எந்த அனுமதியும் கிடையாது என்றும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் விஷயங்களில் ஜனநாயக உரிமையை கேட்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும், தனி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று இரண்டு நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்தனர். இதையடுத்து சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
The post அரசியல் கட்சிகள் தங்கள் அலுவலகங்களில் கொடிக் கம்பங்களை வைத்துக் கொள்ளுங்கள்; சாலைகளை பயன்படுத்த வேண்டாம்: ஐகோர்ட் கிளை காட்டம்!! appeared first on Dinakaran.
