
புனே: மகாராஷ்டிராவில் பஸ் நிலையத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் ஸ்வார்கேட் பஸ் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் 26 வயது இளம்பெண் ஒருவர், பால்டன் என்ற இடத்துக்கு செல்ல காத்திருந்தார். அச்சமயம் அங்கு வந்த நபர் ஒருவர், பஸ் வந்துவிட்டதாகவும் ஆனால் வேறு இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். பஸ் நிலையத்திலேயே வெறிச்சோடிய ஒரு இடத்தில் ஒரு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பஸ் தான் பால்டனுக்கு செல்லும் பஸ் என்றுக் கூறி ஆசாமி பெண்ணை பஸ்சில் ஏற்றியுள்ளார்.
அதிகாலை நேரம் என்பதால் இருட்டாக இருந்துள்ளது. பெண் பஸ்சில் ஏறியதும் பின் தொடர்ந்து உள்ளே சென்ற ஆசாமி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி விட்டார். பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, தத்தாத்ரேய ராமதாஸ் கடே(36) என்பவர் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தத்தாத்ரேயா மீது ஏற்கனவே திருட்டு, செயின் பறிப்பு வழக்குகள் இருப்பதாக தெரிவித்த போலீசார் அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
பஸ்சில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திரபவார்) எம்பி சுப்ரியா சுலே கண்டனம் தெரிவித்துள்ளார். ‘ஸ்வர்கேட் பஸ் நிலையம் அருகிலேயே போலீஸ் நிலையம் உள்ளது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போதும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. குற்றங்களை தடுக்க உள்துறை தவறிவிட்டது. இந்த வழக்கின் விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதே போல காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
The post மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்; அரசு பஸ்சில் பெண் பலாத்காரம்: தலைமறைவான வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.
