×

இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் பாராட்டும் மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: உலக அளவில் அனைவரும் பாராட்டும் மருத்துவ கட்டமைப்பை நாம் உருவாக்கியிருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, திருவான்மியூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 2,642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசியதாவது:
திராவிட மாடல் அரசு என்பது, மக்களைக் காக்கக்கூடிய அரசு. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் உயர்ந்த லட்சியம். எத்தனை தடைகள் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தாலும் சரி, அதையெல்லாம் எதிர்கொண்டு தன் பணியை மேற்கொண்டு வருகின்றது நம்முடைய திராவிட மாடல் அரசு. இங்கே வழங்கப்பட்டுள்ள பணி ஆணைகளும், சட்ட நெருக்கடிகளைக் கடந்துதான் வழங்கப்படுகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். உயிர்காக்கக்கூடிய மருத்துவர்களை, மக்கள் மிகவும் உயர்வாக பார்க்கிறார்கள். தமிழ்நாடு இன்றைக்கு இந்தியாவின் மருத்துவத் தலைநகராக இருக்கிறது என்றால், அதற்கு திமுக ஆட்சிக் காலங்களில் கலைஞர் உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்பு தான் அதற்கு காரணம் என்பது நமக்கு நன்றாக தெரியும்.

மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள், நகரங்கள் தோறும் அரசு மருத்துவமனைகள், கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெரிய நகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள், உயிர்காக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை என்று தலைவர் கலைஞர் உருவாக்கிய கட்டமைப்புதான் மருத்துவ சேவையில் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.

இந்தக் கட்டமைப்பு சரியான முறையில் செயல்படவேண்டும் என்றால், நிச்சயமாக அதற்கேற்றார்போல நம்முடைய டாக்டர்கள் தேவை. அதுவும் அரசாங்க மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை, எளிய கிராமப்புற நோயாளிகளை, கர்ப்பிணிப் பெண்களை, குழந்தைகளின் உடல் நோய்களை மட்டுமல்ல, அவர்களின் மனநிலை, புறச்சூழல் இதையும் புரிந்துகொள்ளக் கூடிய டாக்டர்கள் தேவை.

கிராமத்திலிருந்தும், சின்னச் சின்ன நகரங்களிலிருந்தும் டாக்டர்கள் உருவானால்தான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும். அதைப் புரிந்துகொண்டுதான், முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்கிற மகத்தான திட்டத்தைக் கொண்டு வந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்.

இன்றைக்கு சிறிய, சிறிய நகரங்களிலிருந்தும் கூட, இத்தனை டாக்டர்கள் உருவாகி இருக்கிறீர்கள் என்றால் அதற்கெல்லாம் வித்திட்டவர் கலைஞர். அவரது வழியில், திராவிட மாடல் அரசு மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம். மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களின் வாழ்நாளை நீட்டித்து இருக்கிறது. “இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” பல உயிர்களைக் காப்பாற்றி, அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நிம்மதியாக வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.

2 நாள்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு அவசியமாக தேவைப்படும் மருந்துகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கத்தான் முதல்வர் மருந்தகங்கள் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உரிய சிகிச்சை கிடைக்கவேண்டும், அவர்கள் நோய் குணமாகி, நல்லபடியாக வாழ வேண்டும் என்று அரசு பல திட்டங்களை கொண்டு வந்தாலும், அதையெல்லாம் செயல்படுத்த உங்களைப் போன்ற டாக்டர்களின் பங்களிப்புதான் மிக மிக முக்கியம். டாக்டர்களான நீங்கள் இல்லாமல் இந்தத் திட்டங்கள் எல்லாம் இல்லை. மருத்துவத் துறையின் மற்ற பணியாளர்கள் இல்லாமல் இந்தத் திட்டங்கள் நிறைவேறப் போவதில்லை, வெற்றியும் கிடைக்கப் போவதில்லை.

உங்களுக்கு இன்றைக்கு முதலமைச்சர் என்ற முறையில், நான் பணி ஆணைகளை வழங்கி இருக்கிறேன். ஆனால், நீங்கள் செய்யப்போவது சாதாரண பணியோ, வேலையோ அல்ல. மக்களின் உயிர் காக்கும் சேவை. சமுதாயத்திற்கான மிகப் பெரிய தொண்டு. இந்த இடத்தை அடைய நீங்கள் எத்தனையோ இரவுகள் கண் விழித்திருப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து இருப்பீர்கள். எல்லாவற்றையும் கடந்துதான் இங்கே நீங்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!

இனி, மக்கள் உங்களை நம்பி தங்கள் உயிர் காக்கும் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற அளவுக்கு, உங்களுடைய சேவை அமைய வேண்டும். மீண்டும், மீண்டும் சொல்கிறேன்; மக்களுடைய நலனை நீங்கள் கவனியுங்கள்; உங்களுடைய நலனை கவனிக்க இந்த திராவிட மாடல் அரசு இருக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இருக்கிறார். முதலமைச்சரான நானும் இருக்கிறேன். உயிர்களைக் காக்கும் தொண்டாற்றப் போகும் உங்களுக்குத் தேவையான, எது எது அவசியம் தேவைப்படுகிறதோ அதையெல்லாம் நிச்சயம் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் பாராட்டும் மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Department of Medicine and Public Welfare ,Thiruvanmiyur, Chennai ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...