×

வரியை குறைத்து மதிப்பிடுவதால், பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழக்கும் ஆபத்து பல கோடி பேரம் பேசிய சார்பதிவாளர் அதிரடி மாற்றம்

*  மேலும் பல அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதால் பதிவுத்துறையில் பரபரப்பு

சென்னை: வரிகளை குறைத்து மதிப்பிட பல கோடி பேரம் பேசியதாக வில்லிவாக்கம் சார்பதிவாளர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யபட்டுள்ளார். சென்னை அம்பத்தூரில் டாடா நிறுவனத்தின் டிசிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 17.22 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை செயற்கை நுண்ணறிவு தரவுகளை வைத்திருக்கும் நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியது.

நிலத்தின் மதிப்பை சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் பார்த்தபோது அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தது. அந்த இடம் மேயக்கால் புறம்போக்கு இடமாக உள்ளது. இந்த இடத்தை மாநில அரசு, ஒன்றிய அரசின் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அப்போது 17.22 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்வதற்கான அரசாரணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டது. பத்திரப்பதிவு செய்யப்படவில்லை. அம்பத்தூரில் உள்ள 17.22 ஏக்கர் நிலத்தை, பிஎஸ்என்எல் நிறுவனம், டாடாவின் டிசிஎஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கான அரசாணையை பிறப்பித்தது.

அப்போதும் பத்திரப்பதிவு செய்யவில்லை. இதனால் இந்த நிலம் வகைப்படுத்தப்படாமல் மேயக்கால் புறம்போக்காகவே இருந்தது. தற்போது டிசிஎஸ் நிறுவனம், மற்றொரு தனியார் நிறுவனமான செயற்கை நுண்ணறிவு தரவுகளுக்கான நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது. 2 நிறுவனங்களுமே தனியார் என்பதால் அரசாணை பிறப்பிக்க முடியாமல், கண்டிப்பாக பத்திரப்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்கியது வேண்டும் என்றால் அரசாணையாக இருந்திருக்கலாம். ஒன்றிய அரசு, டிசிஎஸ் நிறுவனத்திற்கு விற்கும்போது கண்டிப்பாக பத்திரப்பதிவு செய்திருக்க வேண்டும். அப்போது அரசுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் வந்திருக்கும். அப்போது பதிவு செய்யப்படாமல் உள்ளது. இதனால் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடியிருப்பு நிலங்களாக மாற்றி, குறைந்த மதிப்பு போடத்தான் டிசிஎஸ் நிறுவனம் பதிவுத்துறை அதிகாரிகளை நாடியுள்ளது.

அந்தப் பகுதியில் தற்போது குறைந்தபட்சம் நிலத்தின் மதிப்பு சதுர அடிக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் உள்ளதாம். அந்த இடத்தில் நிலம் மட்டுமல்லாது 8 மாடிகள் கொண்ட ஐடி நிறுவன கட்டிடங்கள் பல உள்ளன. இதற்கும் சேர்த்து மதிப்பிட வேண்டும். ஆனால் சதுரடி அடி ரூ.2900க்கு முடிக்க திட்டமிட்டிருந்தார்களாம். அப்படி செய்தால் அரசுக்கு ரூ.90 கோடிக்கு மேல் வரி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக நிலம் உள்ள தெருவை, விலை குறைந்த மதிப்புள்ள தெருவுடன் காட்டி குறைந்த மதிப்பு போட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், இந்தப் பிரச்னை குறித்து வில்லிவாக்கம் சார்பதிவாளராக உள்ள பிரகாஷ், மாவட்ட பதிவாளர் மகேஷ்குமாருக்கு அறிக்கை கொடுத்துள்ளார். அவர்தான் மதிப்பின் நிர்ணயம் செய்யக் கூடிய அதிகாரம் படைத்தவர். இந்தநிலையில்தான் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சில புரோக்கர்கள் இந்த விவகாரங்களில் தலையிட்டு டாடா நிறுவனத்திடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. அவர்களும் சில கோடிகள் வரை பணம் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பதிவுத்துறையில் பணியாற்றும் கீழ் மட்ட அதிகாரிகள் சிலர் தலையிட்டு அரசுக்கு உண்மையாக வரி கட்ட வேண்டும் என்றால் பல நூறு கோடியை தாண்டும். இதனால் அரசுக்கு இழப்பு மட்டும் ரூ.90 கோடிக்கு மேல் வரும். இதனால் இரட்டை இலக்கத்தில் லஞ்சம் வேண்டும். இதை உயர் அதிகாரிகளுக்கும் நாங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதில் நேர்மையான பல அதிகாரிகளின் பெயர்களையும் அவர்கள் கூறியதால், டாடா நிறுவனத்திற்கு சந்தேகம் எழுந்தது.

இதனால், அதிக அளவில் லஞ்சம் கொடுக்க விரும்பாத டாடா நிறுவனம் இது குறித்து தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர்கள் விசாரித்தபோதுதான் கீழ்மட்ட அதிகாரிகள் சிலர் சேர்ந்து, உயர் அதிகாரிகளின் பெயரை தவறாக கூறி பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தெரிந்ததும் அமைச்சர் மூர்த்தி, செயலாளர் மங்கத்ராம் சர்மா, பதிவுத்துறை தலைவர் ஆலிவர் பொன்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் சார்பதிவாளர் பிரகாஷை, நெல்லை நிர்வாகப்பிரிவு மேனேஜராக அதிரடியாக மாற்றி உத்தரவிட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், அவர்களையும் மாற்ற அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் பதிவுத்துறையில் உள்ள அந்த அதிகாரி ஒவ்வொரு முறை தவறு செய்து மாட்டும்போதெல்லாம் போலீசில் எஸ்பியாக பணியாற்றும் அதிகாரிதான் காப்பாற்றி வந்துள்ளாராம். ஆனால் இந்த முறை அவர் காப்பாற்ற முயன்றால், அவருக்கும் சேர்த்து சிக்கல் வரும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள். இதனால் அமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம், பதிவுத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வரியை குறைத்து மதிப்பிடுவதால், பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழக்கும் ஆபத்து பல கோடி பேரம் பேசிய சார்பதிவாளர் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Villivakkam ,Tata Group ,TCS ,Ambattur, Chennai… ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...