×

அரசு பதிவேட்டில் ஏரி நிலமாக பதிவு மீண்டும் நத்தம் பட்டாவாக மாற்ற வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வசிக்கும் மக்களுக்கு அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா, அரசு பதிவேட்டில் ஏரி நிலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதை, மீண்டும் நத்தம் பட்டாவாக மாற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் தாலுகா, வையாவூர் கிராமத்திற்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில், மூன்று தலைமுறைகளாக வீடுகள் கட்டி வசித்து வந்த கிராம மக்களுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் வசித்து வந்த கிராம மக்கள், வங்கிகளில் கடன் வாங்கி வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.

இங்கு, வசிக்கும் கிராம மக்கள் சிலர், தங்கள் குடும்பத்தினருக்கு பத்திரப்பதிவு செய்து பெயர் மாற்றம் செய்துதர முற்பட்டபோது, அரசு வழங்கிய நத்தம் வகை பட்டா நிலம், தற்பொழுது ஏரி நிலம் என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த வையாவூர் – அண்ணா நகர் கிராம மக்கள், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நேரில் வந்து, அரசு வழங்கிய நத்தம் பட்டா நிலம், தற்பொழுது தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் ஏரி நிலம் என வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்து, பல தலைமுறைகளாக வசித்து வரும் தங்களுக்கு மீண்டும் நத்தம் பட்டாவாக வகை மாற்றம் செய்து தரவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அப்போது, அம்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், கிராம மக்களின் கோரிக்கை மனு மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில் கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளம்பி சென்றனர்.

The post அரசு பதிவேட்டில் ஏரி நிலமாக பதிவு மீண்டும் நத்தம் பட்டாவாக மாற்ற வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Natham Patta ,Kanchipuram ,Kanchipuram taluka ,Vaiyavur ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...