
சென்னை: திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளியம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. அவரது, மகன்கள் கோபிநாத் (45), ராமதாஸ் (36). கூலி வேலை செய்து வருகின்றனர். சகோதரர்களான 2 பேரும் திருமணமாகி, அருகருகில் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு கோபிநாத்தின் மனைவி லோகநாயகி, அவரது வீட்டில் தீபம் ஏற்றி வைத்து, பூஜைகள் செய்துவீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். ராமதாஸ் வீட்டிலும் வேலைக்கு சென்று விட்டனர். லோகநாயகி வீட்டில், தீபம் எரிந்து கொண்டிருந்தபோது எலி தீபத்தின் திரியை கூரை வீட்டின்மீது இழுத்துச் சென்றபோது தீ பரவியுள்ளது.
கூரை வீடுகள் என்பதால் 2 வீடுகளிலும் தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அதிர்ச்சியடைந்த, அக்கம் பக்கத்தினர், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர்.
இருப்பினும் தீ வீடுகள் முழுவதும் பரவி வீட்டில் இருந்த பீரோ, கட்டில், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் என அனைத்தும் எரிந்து நாசமாகின. தீவிபத்து குறித்து தகவல் தெரிவித்தும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வர கால தாமதமானதால் 2 வீடுகளும் நாசமானதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.தைப்பூசம் என்பதால் சித்தூர் சாலை முதல் அரக்கோணம் சாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், உரிய நேரத்தில் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ராமதாஸ் என்பவர் புதிய வீடு கட்ட சமீபத்தில் ₹1 லட்சம் கடன் பெற்று வீட்டில் வைத்திருந்த நிலையில், அப்பணம் தீயில் கருகியதாக வேதனையுடன் தெரிவித்தார்.
The post தீபத்தின் திரியை எலி இழுத்துச் சென்றதால் 2 கூரை வீடுகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.
