×

தாது மணலை முறைகேடாக அள்ளிய விவகாரம்: வி.வி.மினரல்சுக்கு ரூ2,195 கோடி அபராதம்


* மேலும் 5 நிறுவனங்களுக்கு ரூ1,333 கோடி அபராதம்
* நெல்லை கலெக்டர் அதிரடி

நெல்லை: தாது மணலை முறைகேடாக அள்ளிய விவகாரத்தில் விவிமினரல்ஸ் நிறுவனத்துக்கு ரூ2,195 கோடி உட்பட 6 தாது மணல் நிறுவனங்களுக்கு ₹3 ஆயிரத்து 528 கோடி அபராதம் விதித்து நெல்லை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் காணப்படும் தாது மணலுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. இந்த தாது மணலில் கதிரியக்க தன்மை கொண்ட இலுமனைட், கார்னெட், ரூடைல், சிலிகான், மோனோசைட் ஆகிய விலை மதிப்பில்லாத தாது உப்புகள் உள்ளன. அணுசக்திக்கு தேவையான இயற்கையான கதிரியக்க தனிமங்கள் இந்த தாது மணலில் உள்ளன. தமிழக கடற்கரை பகுதிகளில் கிடைக்கும் இத்தகைய தாதுமணலுக்கு உலக அளவில் கூடுதல் மதிப்புள்ளது. கோடி, கோடியாக லாபம் கொட்டும் இந்த தாது மணலை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

கடற்கரையோரங்களில் நடந்த இந்த இயற்கை வள சுரண்டல் குறித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. கடந்த 2002ல் தொடங்கி 2013 வரை நெல்லை, தூத்துக்குடி கடலோர பகுதிகளில் தாது மணல் அதிக அளவில் சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் கடந்த 2013 முதல் தாதுமணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தாதுமணல் கொள்ளை தொடர்பாக 2015ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு வழக்கை எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் தமிழக அரசின் தொழில்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘தாது மணல் எடுப்பதற்கு 7 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் நெல்லையில் 52, தூத்துக்குடியில் 6, குமரியில் 6 என மொத்தம் 64 உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும், சட்டவிரோதமாக தாதுமணல் எடுப்பது தொடர்பான புகார்களின் அடிப்படையில், 2013 முதல் அதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும்’ தெரிவிக்கப்பட்டது.

தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பின்பும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட தாதுமணல் இழப்பை ஈடுகட்டும் வகையில் ₹5ஆயிரத்து 832 கோடியை தனியார் தாதுமணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், இடிந்தகரை, திசையன்விளை சுற்று வட்டாரங்கள், கூத்தங்குழி பகுதிகளில் 10 ஆண்டுகளில் இலுமனைட், சிர்கான், கார்னெட் உள்ளிட்ட தாது மணல்கள் 40 லட்சம் டன்னுக்கு மேலாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்ததில் 2018 முதல் 2022 வரை தாதுமணல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட பின்னரும் சுமார் 80 லட்சம் டன் தாதுமணல் சட்ட விரோதமாக கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி மற்றும் வழக்கறிஞர் ஆணையர் சுரேஷ் ஆகியோர் அளித்த அறிக்கை அடிப்படையில் ஜனவரி 2024 முதல் கலெக்டரின் விசாரணை நடைபெற்று வந்தது.

இதில் 4 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் தாது மணல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி ஜோதிராமன் அமர்வில் விசாரணை நடந்தது. இதில் நெல்லை மாவட்ட நிர்வாகம், வி.வி மினரல், பீச் மினரல் கம்பெனி, ட்ரான்ஸ்வேர்ல்டு நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் ₹3ஆயிரத்து 528 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் அபராதத் தொகையை வசூலிக்கும் முயற்சியில் நெல்லை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இதில் விவி மினரல்ஸ் நிறுவனம் மட்டுமே ₹2 ஆயிரத்து 195 கோடி அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தாது மணலை முறைகேடாக அள்ளிய விவகாரம்: வி.வி.மினரல்சுக்கு ரூ2,195 கோடி அபராதம் appeared first on Dinakaran.

Tags : VV Minerals ,Nellai Collector ,Nellai ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...