×

கூடலூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

*மன்றக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

கூடலூர் : கூடலூர் நகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் பரிமளா தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் சிவராஜ், நகராட்சி ஆணையர் சுவிதா ஸ்ரீ, மேலாளர் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், ஓவர்சீர் பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் குப்பைகள் அகற்றும் வாகன பிரச்னை மற்றும் குடிநீர் பிரச்னை பிரதானமாக பேசப்பட்டது.

அனூப்கான் (அதிமுக), உஸ்மான் (காங்கிரஸ்) ஆகியோர் பேசுகையில், ‘‘நகாரட்சியில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக ஒப்பந்ததாரர் மூலம் இயக்கப்படும் வாகனங்களில் மாசு கட்டுப்பாட்டு சான்று மற்றும் தகுதி சான்றிதழல் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களில் குப்பைகள் எடுக்க அனுமதிக்க கூடாது கூடாது. அந்த வாகனங்களில் பணியாளர்களை ஏற்றிச் செல்லக் கூடாது.

குப்பை வாகனங்களில் கொண்டு வரப்படும் குப்பைகளை எடை போட நகராட்சி சார்பில் எடை மேடை அமைக்க வேண்டும். நகரில் மக்கள் நடமாட்டம் வாகன நடமாட்டம் அதிகம் உள்ள ‘பீக் அவர்’ நேரங்களில் குப்பை அள்ளப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ள காலை நேரத்தில் குப்பைகளை அகற்றுவதற்கு உத்தரவு போட வேண்டும்’’ என்றனர்.

வெண்ணிலா சேகர் (திமுக), சக்கீனா (முஸ்லிம் லீக்), சத்தியசீலன் (திமுக), ஆக்கனஸ் கலைவாணி (திமுக), லீலா வாசு (கம்யூனிஸ்ட்) பேசியதாவது: கூடலூர் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்க தினசரி 6 மெட்ரிக் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஓவேலி ஆத்தூர் பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும் ஹெல்லன் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 80 சதவீதம் தண்ணீர் கிடைக்கிறது.

இதேபோல பல்மாடி கூட்டு குடிநீர் திட்டமும் இயக்கத்தில் உள்ளது. இத்திட்டங்களில் நகராட்சிக்கு பெரிய அளவிலான செலவினங்கள் எதுவும் இல்லாமல் தண்ணீர் கிடைக்கிறது. காந்தி நகர் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு டாங்க் 13.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது. இங்கு வரும் தண்ணீர் சுத்திகரிப்பு தொட்டியில் உள்ள ஓட்டைகள் மூலம் வீணாக வெளியேறுகிறது. மற்றொரு டேங்க் மூலமாக உபரி நீரும் அதிக அளவில் வெளியேறி வருகிறது. முறையாக இத்திட்டத்தை பராமரிப்பு செய்து நடைமுறைப்படுத்தினால் தினசரி 8.1 மெட்ரிக் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.

மேலும் பெரிய அளவில் செலவினங்கள் இன்றி தடையின்றி குடிநீர் வழங்கக்கூடிய திட்டத்தை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மழைக்காலத்தில் கூட ஒரு சில பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையர் இந்த திட்டதை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

தலைவர் பரிமளா (திமுக): ஹெலன் மற்றும் பல்மாடி கூட்டுக்குடிநீர் திட்டங்களில் கோடைகாலத்தில் தண்ணீர் வெகுவாக குறைந்து விடுவதால் அதற்கு மாற்று ஏற்பாடாக கோழிப்பாலம் குடிநீர் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. புதிதாக தொரப்பள்ளியில குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தடை இன்றி குடிநீர் வழங்குவதற்கு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஹெலன் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஒரு பொறியாளர் மூலம் அடுத்த மாதத்திற்குள் ஆய்வு செய்து அங்கு கிடைக்கும் தண்ணீரை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜேந்திரன் (திமுக): கூடலூர் நகரில் நடை பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சிறமம் இன்றி நடந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். நகரில் பல்வேறு இடங்களில் புதிதாக ஏராளமான மீன் கடைகள் துவக்கப்பட்டுள்ளன. உரிய அனுமதி இன்றி இயங்கும் மீன் கடைகளை அகற்ற வேண்டும். சாலை ஓர பெட்டிக்கடைகள் சிற்றுண்டி கடைகளை ஒழுங்குபடுத்தி அவற்றில் பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்ய வேண்டும்.

கூடலூர் நகர் பழைய பேருந்து நிலையம் சிக்னல் துவங்கி சுங்கம் ரவுண்டன வரை அமைக்கப்படும் புதிய கால்வாய் பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்து தடை செய்ததால் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ 96.50 லட்சம் நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்ட நிலையில் பணிகளை தொடர பொது நிதியை உபயோகிக்க கூடாது. இந்த பணிக்கான திட்டத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதங்கள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post கூடலூர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Kudalur Municipality ,Municipal ,President ,Parimala ,Vice President ,Sivaraj ,Municipal Commissioner ,Suvita Sri ,Manager ,Chandrakumar ,Gudalur ,Dinakaran ,
× RELATED சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுவனை துரத்திய தெருநாய் கூட்டம்