×

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.37.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: தீர்மானம் நிறைவேற்றம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.37.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியக்குழு தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கடைசி கூட்டம் நேற்று நடைபெற்றது. அடுத்த மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவுள்ள நிலையில், தற்போது நடந்த கடைசி கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் பொன்.சு.பாரதி உட்பட ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் வரவு செலவு கணக்கு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கிராமங்களில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட பணிகளுக்காக ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.37.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் பொன்.சு.பாரதி, வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் கலைஞர் சிலை வைக்க அனுமதிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு முறையாக கலெக்டரிடம் மனு வழங்கி உரிய அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அற்புதராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சோமசேகர், ஒன்றிய பொறியாளர் சாவித்திரி, ஒன்றிய கவுன்சிலர்கள் நதியா நாகராஜன், முத்துரெட்டி, சேகர், சி.எம்.ரவி, முத்துராமன், சுகுணா நாகவேலு, உஷா ஸ்டாலின், பத்மா கோவிந்தராஜன், புஷ்பா பாஸ்கர், விநாயகம்மாள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.37.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Pallipatu Union ,Pallipattu ,Union General Fund ,Pallipattu Union ,Union Committee ,Jhansirani Viswanathan ,President ,Tiruvallur District ,Pallipatu Union Committee.… ,Dinakaran ,
× RELATED தடையை மீறி மறியல் 100 பேர் மீது வழக்கு