×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 2.30 மணி முதல் 3 மணி வரை தைலகாப்பு திரை நீக்கி, திருவடி தரிசனத்துடன் மார்கழி மாத பூஜை, 3 மணி முதல் 3.45 மணி வரை தனுர்மாத தரிசனம் நடந்தது. தொடர்ந்து ரத்ன அங்கியுடன் பெருமாள் பரமபதமவாசல் திறப்பு காலை 5 மணியளவில் நடந்தது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார்.

தொடர்ந்து, பன்னிரு 12 ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பானாழ்வார் திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. காலை 7 மணியளவில் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் 1 மணியளவில் நவகலச ஸ்தூபன திருமஞ்சனத்தின் போது ஆழ்வார் மற்றும் ஆச்சாரியார்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் ஸ்ரீரங்கநாதன் செய்திருந்தார். இதேப்பேன்று, காக்களூர் – பூங்கா நகர் சிவவிஷ்ணு மற்றும் ஸ்ரீ ஜல நாராயண பெருமாள் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. சத்தியமூர்த்தி தெரு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், புல்லரம்பாக்கம் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் ஸ்ரீ சந்தான விநாயகர் ஆலயத்திலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

The post வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Perumal ,Vaikunta Ekadashi ,Thiruvallur ,Srivaithiya Veeraragava ,Perumal temple ,Thiruvadi darshan ,
× RELATED திருப்பதியில் மீண்டும் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம்