கும்மிடிப்பூண்டி: புதுவாயலில் ரூ.700 கோடியில் ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமான பணிகளை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் பகுதியில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உற்பத்தி திறன் கொண்ட இரும்பு அச்சு முறை மூலம் உருவாக்கப்படும் ரயில் சக்கரங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.700 கோடி மதிப்பில் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று உற்பத்தி தொடங்கப்படும். இங்கு தயாரிக்கப்படும் 80,000 சக்கரங்கள் இந்திய ரயில்வேயில் பயன்படுத்தப்பட்டு, மீதமுள்ள சக்கரங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். வந்தே பாரத் உள்ளிட்ட அதிவேக ரயில்களுக்கு அழுத்தங்களை தாங்கக்கூடிய சக்கரங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது, ரயில் சக்கரங்களை மற்ற பகுதிகளுக்கு எடுத்து செல்ல துறைமுகத்திற்கு அருகிலேயே தயாரிக்கப்பட உள்ளது. தொழில்துறையில் தமிழகம் சிறந்த வரலாறு பெற்றுள்ளது. இங்கு தொழிற்சாலை நிறுவப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post புதுவாயலில் ரூ.700 கோடியில் ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமான பணி: ஒன்றிய அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.