விழுப்புரம்: விழுப்புரம் அருகே நில அளவீடு செய்ய ரூ.4500 லஞ்சம் வாங்கிய சர்வேயர், உதவியாளர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா கொடுங்கால் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(45). இவர் சர்வேயராக கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது உதவியாளராக சரத்குமார்(27) என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் புதிதாக வாங்கிய நிலத்திற்கு நில அளவை செய்ய கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் சர்வேயர் ராமமூர்த்தி என்பவரை அணுகியுள்ளார். அதற்கு அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதையடுத்து சுரேஷ் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று மாலை சுரேஷ் ராமமூர்த்தியின் உதவியாளரும், இடைத்தரகரான சரத்குமாரிடம் கொடுத்துள்ளார். அதனை சரத்குமார் சர்வேயர் ராமமூர்த்தியிடம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
The post நில அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயர் உதவியாளர் கைது appeared first on Dinakaran.