×

கார் சீட்டின் அடியில் ரகசிய அறை 136 கிலோ கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது

தஞ்சை: தஞ்சையில் ஒரே பதிவெண் கொண்ட 2 கார்களில் 136 கிலோ கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை பள்ளியக்ரஹாரம் கூடலூர் ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வந்த தகவலின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஒரே பதிவெண் கொண்ட 2 கார்கள் அந்த பகுதியில் நின்றதால் சந்தேகமடைந்த போலீசார், கார்களில் இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். மேலும கார்களிலும் சோதனையிட்டனர்.

இதில் கார்களில் பின் சீட்டுக்கு அடியில் ரகசிய அறை அமைத்து அதில் கஞ்சாவை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த 65 பொட்டலங்கள் கொண்ட 136 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம். மேலும் விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்த ரவிச்சந்திரன்(44), சுப்பிரமணி(45), புதுக்கோட்டையை சேர்ந்த பெர்னான்டோ(30), ஐயப்பன்(29) என்பதும், இவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ய ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரே பதிவெண் கொண்ட 2 கார்கள், 5 செல்போன்கள், கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். மேலும் கஞ்சாவை ஆந்திராவில் யாரிடமிருந்து வாங்கி வந்தனர், மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தினர். பின்னர் 4 பேரையும் தஞ்சை நீதிபதி முன் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

The post கார் சீட்டின் அடியில் ரகசிய அறை 136 கிலோ கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Danjay ,Thanjay Slyakraharam Koodalur Road ,Medical College Police ,Dinakaran ,
× RELATED தஞ்சை மருத்துவக்கல்லூரி அருகே பட்டாக்கத்தியை காட்டி மிரட்டியவர் கைது