×
Saravana Stores

டிவி நடிகை சவுந்தர்யாவிடம் ரூ.17.5 லட்சம் மோசடி

சென்னை: டிவி நடிகை சவுந்தர்யாவிடம் ரூ.17.5 லட்சம் மோசடி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் பெடக்ஸ் கொரியர் மோசடி மற்றும் ஆன்லைன் டிரேடிங் மோசடி மூலமாக கோடிக்கணக்கான பணத்தை பொதுமக்களிடமிருந்து சைபர் க்ரைம் மோசடி கும்பல்கள் கொள்ளை அடித்து வருகின்றன. இந்நிலையில் சவுந்தர்யா என்ற சின்னத்திரை நடிகை, சைபர் க்ரைம் மோசடியில் ரூ.17.5 லட்சம் இழந்ததாக தெரிவித்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தான் 8 வருடமாக சம்பாதித்ததை ஒரு போன் காலில் நடந்த சைபர் க்ரைம் மோசடி மூலமாக இழந்ததாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்தான வழக்கின் விவரங்களை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த வழக்கு குறித்து காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொண்டதில் சின்னத்திரை நடிகை சவுந்தர்யா கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி சூளைமேட்டில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது செல்போன் அழைப்பு ஒன்று வந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். அதில், பெடக்ஸ் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் மும்பையில் இருந்து ஈரானுக்கு தங்கள் பெயரில் அனுப்பப்பட்ட பார்சலில் பாஸ்போர்டுகள் மற்றும் எம்டிஎம்ஏ போதைப் பொருள் உள்ளிட்டவை இருப்பதாகவும் அது தற்போது ரிட்டன் வந்துள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாக ராகேஷ் சர்மா என்பவர் பேசியுள்ளார்.

இதையடுத்து மும்பை சிபிஐ அதிகாரி என பேசிய நபர் நடிகை சவுந்தர்யாவை ஸ்கைப் கால் மூலமாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, போதைப் பொருள் பார்சல் அனுப்பாமல் இருந்தீர்களா? எனவும் நீங்கள் சம்பாதித்து வங்கியில் வைத்திருக்கிற பணம் இதுபோன்று போதைப் பொருள் காரணமாக சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் சேர்த்து வைத்துள்ளீர்களா? எனவும் பல்வேறு கோணத்தில் விசாரணை என்ற பெயரில் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிபிஐ அதிகாரி என பேசியவரிடம் விளக்கம் கேட்டபோது, சிபிஐ வழக்கு தொடர்பான ஆவணத்தையும் ஆர்பிஐ ஆவணத்தையும் நடிகை சவுந்தர்யாவிற்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி உள்ளனர்.

இதைக் கண்டு உண்மை என நம்பி 12 பணப் பரிவர்த்தனை மூலமாக ரூ.17.5 லட்சம் பணத்தை சவுந்தர்யா அனுப்பியுள்ளார். குறிப்பாக சட்டவிரோத பணம் இல்லை என்றால் தாங்கள் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறும் ஆய்வு செய்து விட்டு பணத்தை திரும்பி அனுப்புவதாக சிபிஐ அதிகாரி போல் பேசியவர் கூறியதால் பணத்தை அனுப்பினேன். சற்று நேரத்திற்குப் பிறகு பணம் வராததால் விசாரணை செய்ததில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக தேசிய சைபர் க்ரைம் போர்டலுக்கு புகார் அளித்த பிறகு, சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தேன் என புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து புகாரின் பேரில் சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் பிரிவு போலீசார், கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சவுந்தர்யா அனுப்பிய பணம் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மும்பை ,அஸ்ஸாம், மைசூர், போபால் என பல்வேறு இடங்களில் 9 வங்கிக் கணக்குகளுக்கு சென்றடைந்தது தெரியவந்துள்ளது. வழக்கமாக ஒரே ஒரு வங்கிக் கணக்கில் பணத்தை ட்ரான்ஸ்பர் செய்யச் சொல்லும் சைபர் க்ரைம் மோசடி கும்பல், இந்த விவகாரத்தில் 9 வங்கிக் கணக்கை கொடுத்து பணப் பரிவர்த்தனை செய்யச் சொன்னது மோசடியில் புதுவிதமாக இருப்பதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post டிவி நடிகை சவுந்தர்யாவிடம் ரூ.17.5 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Soundarya ,Chennai ,Paytux ,
× RELATED சென்னை பாரிமுனையில் பழைய விடுதி கட்டடம் இடிந்து விழுந்தது