கிருஷ்ணகிரி: தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்தி மாணவியை பலாத்காரம் செய்த நாம் தமிழர் நிர்வாகி மீது, மேலும் ஒரு பள்ளியில் 14 வயது மாணவியை பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மீதான பாலியல் வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்தி 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நீக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் அவரால் முகாமில் பங்கேற்ற 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்கள். இதுதொடர்பாக சிவராமன், பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், ஆசிரியைகள் உட்பட 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இதனிடையே சிவராமன் வேறு எங்கும் போலியாக என்சிசி முகாம் நடத்தினாரா என்று போலீசார் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தினர். மேலும் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம் என்றும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியிலும் கடந்த ஜனவரி மாதம் என்சிசி முகாம் என்ற பெயரில் சிவராமன் முகாம் நடத்தியுள்ளார்.
அப்போது அந்த பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை சிவராமன், மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவராமன் மீது புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் அவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல சிவராமன் மீது 7 பேரிடம் போலி நீதிமன்ற ஆணை வழங்கி ரூ.36 லட்சம் பண மோசடி செய்ததாகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கிருஷ்ணகிரி அருகே பள்ளியில் நடந்த பாலியல் சம்பவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் அவசர கூட்டம் நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதல்வர் உத்தரவிட்டார். அதே போல நேரில் விசாரணை நடத்தி உரிய பரிந்துரைகள் அளிக்க சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழுவும் அமைத்தார். இந்த குழுவினர் நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்கள் விசாரணையை தொடங்கினர். விசாரணை ரகசியமாக நடத்தப்படுகிறது. முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பின், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடையவர்கள், குற்றத்தை மறைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இதற்காக முதல்வர் அமைத்துள்ள குழுவை சேர்ந்த நாங்கள் இங்கு வந்துள்ளோம். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாகவும், வேறு எதிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்துவார்கள்.
அதே போல பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் உளவியல் ரீதியாக மனநல ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அரசுக்கான பரிந்துரையில் தெரிவிப்போம். கைதான சிவராமன் இதை போல வேறு எங்கும் முகாம்கள் நடத்தி உள்ளாரா என விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் தங்கி விசாரணை நடத்த உள்ளோம்.
பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால், இரவு 7 மணிக்கு மேல் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள அரசு பயணியர் மாளிகைக்கு வந்து புகார் தெரிவிக்கலாம். அவர்கள் பெயர், விவரங்கள், ரகசியம் காக்கப்படும். எனவே யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அச்சமின்றி புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சிறப்பு புலனாய்வு குழு தலைவரும், ஐ.ஜி.யுமான பவானீஸ்வரி, மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட கலெக்டர் சரயு, மாவட்ட எஸ்பி தங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
* மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து அனைவரையும் கைது செய்துள்ளனர்.
* இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், குற்றத்தை மறைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
* பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் உளவியல் ரீதியாக மனநல ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளது.
* இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அரசுக்கான பரிந்துரையில் தெரிவிப்போம்.
* நாம் தமிழர் நிர்வாகி தற்கொலைக்கு முயற்சி: கிருஷ்ணகிரி எஸ்பி தகவல்
கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை கூறுகையில், ‘மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் மாஜி நாதக நிர்வாகி சிவராமனை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்த போது கீழே விழுந்ததில், அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
ஏன் சேலத்திற்கு அவர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார் என நிருபர்கள் கேட்டதற்கு, ‘கைதாகும் போது சிவராமன் எலிபேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதற்கும் சேர்த்து சிகிச்சை அளிக்கவே சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்’ என்றார். கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சிவராமனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையின் போதும், அவர் எலிபேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் எஸ்பி தெரிவித்தார்.
* பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டால் உடனடி தூக்கு: ஜி.கே.வாசன்
நெல்லை: பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார். நெல்லையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நாணயம் வெளியீட்டு விழாவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டதில் எந்த அரசியலுக்கும் இடமில்லை. கலைஞருக்கு மரியாதை செலுத்தியது அரசியல் பண்பாடு. இதற்கு அரசியல் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை. இவை அரசியல் மாற்றத்திற்கோ, முன்னேற்றத்திற்கோ வழியாக இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது மனதில் ரணத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு ஒரே வழி தனி மனித ஒழுக்கம் கட்டாயம் வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்க நெறி பாடங்கள் ஏற்படுத்த வேண்டும். திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இந்த ஒழுக்க நெறி கருத்துக்களை வலியுறுத்த வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும் இதற்கு காரணமாக இருக்கும் மது மற்றும் போதை பொருட்களை தடை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்களை கடுமையான சட்டம் போட்டு சிறையில் அடைக்க வேண்டும்: ராமதாஸ்
திண்டிவனம்: திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இல்லாமல் நிரப்பப்பட்ட பணிகளை ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதி வாரி கணக்கெடுப்பு அடுத்த மாதம் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை எந்தவித அறிக்கையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்ல பயன்கள் கிடைக்கும். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்ஊழியர்களின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அரசும், அரசு ஊழியர்களும் முக்கியத்துவம் தர வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையான சட்டம் போட்டு சிறையில் அடைத்து, அவர்களை வெளியே வர முடியாத அளவுக்கு சட்டம் இயற்ற வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. ஆனால் இரண்டு முறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இதனால் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதியை இழந்து வருகின்றனர் எனவே உடனடியாக ஆசிரியர் தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post விஸ்வரூபமெடுக்கும் கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு மேலும் ஒரு 14 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த நாம் தமிழர் நிர்வாகி: போலீசில் பரபரப்பு புகார் ; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.