×

விபத்து வழக்கில் திருப்பம் கூலிப்படை ஏவி விவசாயி கொலை மனைவி, மகள் உள்பட 4 பேர் கைது

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கூலிப்படை ஏவி விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி, மகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த படதாசம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (55). விவசாயியான இவர் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் பள்ளி அருகில் சாலை விபத்தில் இறந்ததாக கோவிந்தசாமியின் மனைவியும் நாரலப்பள்ளி கிராம உதவியாளருமான மாதேஸ்வரி (49) என்பவர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை அவரது மனைவி மாதேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். பிரேதத்தை எடுத்துச் சென்று அவரது நிலத்தில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் கோவிந்தசாமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணயில் கோவிந்தசாமியை தலையில் அடித்துக்கொன்று தேசிய நெடுஞ்சாலை ஓரம் போட்டுச்சென்றது தெரியவந்தது. இறந்துபோன கோவிந்தசாமியின் மனைவி மாதேஸ்வரி மற்றும் அவரது மகளும், ரஞ்சித்குமார் என்பவரது மனைவியுமான சரண்யா (23) ஆகிய இருவரும் கூலிப்படை அமைத்து கொலை செய்து சாலையில் போட்டது தெரிய வந்தது.

சாமல்பட்டியை சேர்ந்த வேல்முருகன் (29), பெரியதள்ள பாடியை சேர்ந்த பிரசாந்த் (30), ஊத்தங்கரையை சேர்ந்த சிவகாசி குமார் (23), முஷராப், நந்து ஆகியோர் சேர்ந்து கிரிக்கெட் பேட்டால் தலையின் பின்பக்கம் அடித்து கொலை செய்து சம்பவ இடத்தில் இறந்து விட்டதாகவும், அதனால் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளி இறந்து போனதாக நாடகம் ஆடியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

மாதேஸ்வரியிடம் விசாரித்தபோது,`தனது கணவர் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தன்னுடன் தகராறு செய்து அடிப்பார். அதுபற்றி சாமல்பட்டி போலீசில் புகார் செய்தபோது போலீசார் குடும்ப சண்டைக்காக போலீஸ் நிலையம் வரவேண்டாம்; பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என கூறினர். இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர்.

அதன்பிறகும் தன்னை கணவர் அடித்து துன்புறுத்தி வந்தார். அதனால் பெரியதள்ளபாடியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் 20 ஆயிரம் கொடுத்து கை, காலை உடைத்து போடுமாறு சொன்னதாகவும், அவர்கள் கொலை செய்வார்கள் என நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் மாதேஸ்வரி, அவரது மகள் சரண்யா, வேல்முருகன், சிவகாசி குமார் ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான பிரசாந்த், முஷராப், நந்து ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post விபத்து வழக்கில் திருப்பம் கூலிப்படை ஏவி விவசாயி கொலை மனைவி, மகள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Avi Farmer ,Mothangaray ,Krishnagiri District ,Othangarayi ,Sampatty ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள்...