×

பீரோ பட்டறை உரிமையாளர் கொலை பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனின் மைத்துனர் உள்பட 10 பேர் சரண்

சேலம்: சேலம் அருகே பழிக்குப்பழியாக நடந்த பீரோ பட்டறை உரிமையாளர் கொலை வழக்கில், பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனின் மைத்துனர் உள்பட 10 பேர் போலீசில் சரணடைந்தனர். சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி அடுத்த குப்பனூர் வெள்ளியம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற பட்டறை சரவணன்(45). பீரோ பட்டறை நடத்தி வந்த இவர், நேற்று முன்தினம் காரில் அரூர் மெயின்ரோடு பனங்காடு பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு நடந்த பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து சரவணன் கொலையில் தொடர்புடைய காட்டூர் ஆனந்தனின் மனைவி சத்தியா (30), அவரது தம்பி வக்கீல் கணேஷ் (32), பொன்னமாப்பேட்டையைச் சேர்ந்த ஜீவன்ராஜ் (24), கருப்பூரைச் சேர்ந்த சாரதி (21), சூர்யா (25), காமலாபுரத்ைத சேர்ந்த பன்னீர்செல்வம் (28), அல்லிகுட்டையைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் (24) ஆகிய 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர்கள் அனைவரும் இக்கொலைக்கு பல்வேறு வகைகளில் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

காட்டூர் ஆனந்தனை கொலை செய்த நபர்களுக்கு பட்டறை சரவணன் பணஉதவி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து பட்டறை சரவணனை திட்டமிட்டு கொலை செய்தது இவர்களிடம் நடத்திய விசாரணையில் உறுதியானது. இதனையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார், 6 பேரை சேலம் மத்திய சிறையிலும், காட்டூர் ஆனந்தனின் மனைவி சத்தியாவை, பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.

இதனிடையே, இக்கொலையில் ஈடுபட்ட காட்டூர் ஆனந்தனின் மற்றொரு மைத்துனர் கார்த்திக் (35), கந்தசாமி(32), ஹரிஹரன், சேலத்தை சேர்ந்த பூபாலன் உள்பட 10 பேர் நேற்றிரவு காரிப்பட்டி போலீசில் சரணடைந்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, காட்டூர் ஆனந்தன் கொலை செய்யப்பட்டதில், வெளியில் இருந்து அனைத்து பண உதவிகளையும் பட்டறை சரவணன் தான் செய்துள்ளார். ஆனால், போலீசார் அவ்வழக்கில் சரவணனை சேர்க்கவில்ைல.

இந்த விவகாரம் வெள்ளியம்பட்டியில் உள்ள காட்டூர் ஆனந்தனின் உறவினர்கள் மூலமாக, மைத்துனர்கள் கணேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. மேலும், காட்டூர் ஆனந்தனின் மனைவி சத்தியாவும், அக்கொலையில் தொடர்புடையவர்களை சும்மா விடக்கூடாது என, தம்பிகளிடம் தெரிவித்து வந்துள்ளார். இதனால், சரவணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த கணேஷூம், கார்த்திக்கும், அதற்கான கூலிப்படையை ஏற்பாடு செய்தனர். அதன்படி ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களுடன் இணைந்து, கடந்த சில நாட்களாக சரவணனை பின்தொடர்ந்து சென்று நோட்டமிட்டுள்ளனர்.

பின்னர் ஏற்கனவே வகுத்த திட்டத்தின்படி, சரவணன் பட்டறைக்கு செல்லும்போது, காரை கொண்டு மோதி அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு அதே காரில் தப்பி சென்றுள்ளனர். தற்போது சரணடைந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அவர்களை கைது செய்து சிறையிலடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post பீரோ பட்டறை உரிமையாளர் கொலை பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தனின் மைத்துனர் உள்பட 10 பேர் சரண் appeared first on Dinakaran.

Tags : Rawudi Kattur Anandan ,Salem ,Saravanan ,Kuppanur ,Wilyambatty ,Salem District Sukkambati ,Saran ,
× RELATED சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய குண்டூசி