- ஆஸ்திரேலியா
- கேப்டன் கம்மின்ஸ்
- பெர்த்
- பார்டர்-கவாஸ்கர் டிராபி
- ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
- தின மலர்
பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு நவ.22 – 2025 ஜன.7 வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இத்தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டியாகவும் நடத்தப்படுகிறது. 2016ல் இருந்து தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர்களில் இந்தியாவிடம் தோற்றுள்ள ஆஸ்திரேலியா, அதில் 2 தொடரை சொந்த மண்ணில் அடுத்தடுத்து இழந்ததை கவுரவப் பிரச்னையாக பார்க்கிறது.
இம்முறை எப்படியாவது பதிலடி கொடுத்தாக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆஸி. முன்னாள், இந்நாள் வீரர்கள் வழக்கம்போல் கருத்து கந்தசாமிகளாக மாறிவிட்டனர். ‘ஆஸி தான் தொடரை வெல்லும்’ என்று தொடங்கி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை ‘3-1 என்ற கணக்கில் ஆஸி. கைப்பற்றும்’ என்று ஆரூடம் சொல்ல ஆரம்பித்து விட்டனர். இது அவர்கள் வழக்கமாக எதிரணி மீது கையாளும் மன ரீதியான தாக்குதல்கள் தான். இந்த வரிசையில் இணைந்துள்ள ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ், ‘இந்த கோடைக்காலம் எங்களுக்கு வித்தியாசமானதாக இருக்கலாம். கிரீன், லயன், மிட்செல் மார்ஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
லயன் சளைக்காமல் அதிக ஓவர்களை வீசுவது மகிழ்ச்சியான விஷயம். அதனால் கடந்த 10 ஆண்டுகளில் இருந்த நிலைமை மாறும். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்’ என்று கூறியுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் நடப்பு சாம்பியனாக ஆஸ்திரேலியா இருக்கிறது. பைனலில் இந்தியாவை வீழ்த்திதான் கோப்பையை வசப்படுத்தியது. அதே சமயம், ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியா இப்போது முதலிடத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்ல ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதல் 2 இடங்களில் இந்தியாவின் ஜடேஜா, அஷ்வின் உள்ளனர். அக்சர் 5வது இடத்தில் உள்ளார். டாப் 10ல் ஒரே ஒரு ஆஸி. வீரர் மட்டுமே உள்ளார். அது 8வது இடத்தில் உள்ள பேட் கம்மின்ஸ் தான்.
The post ஆல்-ரவுண்டர்கள் அதிகம் இருப்பது ஆஸ்திரேலியாவுக்கு சாதகம்… கேப்டன் கம்மின்ஸ் உற்சாகம் appeared first on Dinakaran.