×

வாஷிங்டன் – ஜடேஜா சுழல் கூட்டணி அசத்தல் நியூசிலாந்து 235 ரன்னுக்கு சுருண்டது

மும்பை: இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்துள்ளது. வாங்கடே மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் சான்ட்னர் (காயம்), சவுத்தீக்கு பதிலாக மேட் ஹென்றி, ஈஷ் சோதி சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் பும்ரா உடல்நிலை சரியில்லாததால், முகமது சிராஜ் இடம் பெற்றார்.

லாதம், கான்வே இணைந்து நியூசிலாந்து இன்னிங்சை தொடங்கினர். கான்வே 4 ரன் எடுத்து ஆகாஷ் தீப் வேகத்தில் எல்பிடபுள்யு ஆக, லாதம் – வில் யங் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தது. லாதம் 28 ரன், ரச்சின் ரவிந்த்ரா 5 ரன் எடுத்து வாஷிங்டன் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினர். நியூசி. 20 ஓவரில் 72 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், வில் யங் – டேரில் மிட்செல் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர்.

பொறுப்புடன் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்தது. வில் யங் 71 ரன் (138 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஜடேஜா பந்துவீச்சில் ரோகித் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பிளண்டெல் (0), கிளென் பிலிப்ஸ் 17 ரன், ஈஷ் சோதி 7 ரன், மேட் ஹென்றி (0) ஆகியோர் ஜடேஜா சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய டேரில் மிட்செல் 82 ரன் (129 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), அஜாஸ் படேல் 7 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். நியூசிலாந்து 65.4 ஓவரில் 235 ரன்னுக்கு சுருண்டது. வில்லியம் ஓ’ரூர்கே 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 22 ஓவரில் 1 மெய்டன் உள்பட 65 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் (18.4-2-81-4), ஆகாஷ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் களமிறங்கினர். ரோகித் 18 ரன் (18 பந்து, 3 பவுண்டரி) விளாசி ஹென்றி பந்துவீச்சில் லாதம் வசம் பிடிபட்டார். அடுத்து ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 30 ரன் (52 பந்து, 4 பவுண்டரி) எடுத்து அஜாஸ் படேல் வீசிய 18வது ஓவரின் 2வது பந்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார்.

முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வர சில நிமிடங்களே இருந்ததால், நைட் வாட்ச்மேனாக முகமது சிராஜ் உள்ளே வந்தார். முதல் பந்திலேயே அவர் முட்டை போட்டு வெளியேற, விராத் கோஹ்லி களமிறங்கினார். அவர் 4 ரன் எடுத்து தேவையில்லாமல் ரன் அவுட்டாக, இந்தியா முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்துள்ளது. 6 ரன்னுக்கு கடைசி 3 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. கில் 31 ரன், ரிஷப் பன்ட் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசி. பந்துவீச்சில் அஜாஸ் 2, ஹென்றி 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 6 விக்கெட் இருக்க, இந்தியா இன்னும் 149 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 2ம் நாள் சவாலை சந்திக்கிறது.

The post வாஷிங்டன் – ஜடேஜா சுழல் கூட்டணி அசத்தல் நியூசிலாந்து 235 ரன்னுக்கு சுருண்டது appeared first on Dinakaran.

Tags : Washington – Jadeja ,New Zealand ,Mumbai ,India ,Whangade Stadium ,Dinakaran ,
× RELATED இங்கி வீரர் 123 ரன் எடுத்து அதிரடி: ஹேரி...