×
Saravana Stores

ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் ஈட்டி எறிதல் பைனலில் நீரஜ்; ஒரே வாய்ப்பில் முன்னேறி அசத்தல்

பாரிஸ்: ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் பங்கேற்க இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா (26 வயது), தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்று மகத்தான சாதனை படைக்கும் முனைப்புடன் பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கி உள்ளார்.

ஆண்கள் ஈட்டி எறிதல் பி பிரிவில் இடம் பெற்றிருந்த நீரஜ், நேற்று நடந்த தகுதிச் சுற்றில் தனது முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரம் எறிந்து பைனலுக்கு தகுதி பெற்றதுடன், முதலிடமும் பிடித்து அசத்தினார். 2022 ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் தடகள போட்டியில் 89.94 மீ. தூரம் எறிந்ததே அவரது சிறப்பான செயல்பாடாக உள்ளது. கிரெனடாவின் பீட்டர்ஸ் ஆண்டர்சன் (88.63 மீ.), பாகிஸ்தானின் நதீம் அர்ஷத் (86.59) பி பிரிவில் 2வது மற்றும் 3வது இடங்களைப் பிடித்தனர். முன்னதாக, ஏ பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் கிஷோர் ஜெனா 80.73 மீட்டர் தூரம் எறிந்து 9வது இடத்தையே பிடிக்க முடிந்தது. மொத்தம் 32 வீரர்கள் இரு பிரிவுகளாக பங்கேற்ற தகுதிச் சுற்றின் முடிவில், 12 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

நீரஜின் முக்கிய போட்டியாளராகக் கருதப்படும் ஜாக்கப் வாட்லெச் (செக்.) ஏ பிரிவில் 85.63 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து 3வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த பிரிவில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (87.76 மீ.), கென்யாவின் ஜூலியஸ் யெகோ (85.97 மீ.) முதல் 2 இடங்களைப் பிடித்தனர். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பரபரப்பான இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.

The post ஒலிம்பிக் தடகளம் ஆண்கள் ஈட்டி எறிதல் பைனலில் நீரஜ்; ஒரே வாய்ப்பில் முன்னேறி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Neeraj ,Olympic Athletics Men ,Paris ,India ,Neeraj Chopra ,Olympic Athletics ,Tokyo 2020 Olympic Games ,Chance ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…