×

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆபரேஷன் ரோந்துக்கு சென்ற தெலங்கானா சிறப்பு போலீசார் வெள்ளப்பெருக்கால் வனப்பகுதியில் 4 நாட்கள் சிக்கி தவிப்பு

*ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பு

திருமலை : சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆபரேஷன் ரோந்துக்கு சென்ற தெலங்கானா சிறப்பு போலீசார் ெவள்ளப்பெருக்கால் வனப்பகுதியில் 4 நாட்கள் சிக்கி தவித்தனர். இவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சத்தீஸ்கர் மாநிலம் எலிமிடியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது என்று தெலங்கானா மாவோயிஸ்ட் சிறப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாவோயிஸ்ட் சிறப்பு போலீசார் மாவோயிஸ்ட் என்கவுன்டர் ஆப்ரேஷன் தொடங்கி கடந்த வாரம் ரோந்து சென்றனர்.

பின்னர் ரோந்து பணியை முடித்துவிட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தெலங்கானா நோக்கி திரும்பினர். ஆனால் வரும் வழியில் சத்தீஸ்கர்- தெலங்கானா எல்லை வனப்பகுதியில் வழி தெரியாமல் போலீசார் சிக்கிகொண்டனர். அப்போது பெய்த கனமழையில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக முலுகு மாவட்டம் வாஜேடு செல்லும் வழியில் ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிறப்பு போலீசார் அனைவரும் வனப்பகுதியில் சிக்கி தவித்தனர். பெய்த மழையில் போலீசாரின் வாக்கி டாக்கியும் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

தகவல் தொழில்நுட்ப தொடர்பு இல்லாததாலும், கடும் வெள்ளப்பெருக்கில் வழிதெரியாததாலும் 4 நாட்களாக உணவு இல்லாமல், விஷ ஜந்துக்கள் மத்தியில் சிறப்பு மாவோயிஸ்ட் போலீசார் சிக்கி தவித்தனர். இந்நிலையில் கடந்த 22ம் தேதி அப்பகுதியில் மழை குறைந்ததால் போலீசாரின் வாக்கி டாக்கியின் சிக்னல் பயன்பாட்டிற்கு வந்தது. உடனடியாக தெலங்கானா போலீசாருக்கு வனப்பகுதியில் வழி தெரியாமல் 4 நாட்களாக சிக்கி உள்ளோம் என்று சிறப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நேற்று ஹெலிகாப்டரில் சத்தீஸ்கர்- தெலங்கானா எல்லை வனப்பகுதியில் போலீசாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரின் சத்தத்தை கேட்ட மாவோயிஸ்ட் போலீசார் வனப்பகுதியில் இருந்தவாறு கைகளையும், கையில் துணிகளை வைத்து சிக்னல் கொடுத்தனர். அதில் போலீசார் இருக்கும் இடம் தெரியவந்தது. அதன்பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு போலீசார் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். எல்லை வனப்பகுதியை விட்டு வாஜேடுக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் அங்கு பேருந்தில் அனைவரையும் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடும் வெள்ளப்பெருக்கால் வனப்பகுதியில் போலீசார் சிக்கி தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆபரேஷன் ரோந்துக்கு சென்ற தெலங்கானா சிறப்பு போலீசார் வெள்ளப்பெருக்கால் வனப்பகுதியில் 4 நாட்கள் சிக்கி தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana special police ,Maoist ,Chhattisgarh ,Tirumala ,Yevallaperukkal forest ,Elimidi ,Telangana ,
× RELATED 2026ல் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலில்...