×

பாலியல் வழக்கில் சிக்க வைக்க சதித்திட்டம்: கேரள முதல்வர், டிஜிபிக்கு நடிகர் நிவின் பாலி புகார்


சென்னை: தன்னை பாலியல் வழக்கில் சிக்க வைக்க சதித்திட்டம் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என கூறி கேரள முதல்வர், கலாச்சாரத் துறை அமைச்சர், டிஜிபி மற்றும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு நடிகர் நிவின் பாலி புகார் கொடுத்துள்ளார். பிரபல மலையாள இளம் நடிகர் நிவின் பாலி, தயாரிப்பாளர் சுனில் உள்பட 5 பேர் துபாயிலுள்ள ஓட்டலில் வைத்து கடந்த வருடம் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளம் நேரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக நடிகர் நிவின் பாலி உள்பட 5 பேர் மீது எர்ணாகுளம் ஊன்னுகல் போலீசார் கூட்டு பலாத்காரம் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் புகார் கொடுத்த இளம்பெண் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், இது பொய்யான வழக்கு என்றும் நடிகர் நிவின் பாலி கூறினார். மேலும் பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய கடந்த வருடம் டிசம்பர் 14 முதல் 16ம் தேதி வரை நிவின் பாலி தங்களுடன் படப்பிடிப்பில் இருந்ததாக டைரக்டர்கள் வினீத் னிவாசன் மற்றும் அருண் ஆகியோர் கூறினர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியான், டிஜிபி மற்றும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு நிவின் பாலி ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், “தன்மீது பொய்யான புகார் சுமத்தப்பட்டுள்ளது.

துபாயில் வைத்து பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் நான் கேரளாவில் தான் இருந்தேன். எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. வெளிநாடு செல்லவில்லை என்பதை நிரூபிப்பதற்கான பாஸ்போர்ட் ஆவணங்களையும் இணைத்துள்ளேன். என் மீது கூறப்பட்டுள்ள புகாரில் சதித்திட்டம் உள்ளது. இதை விசாரித்து வெளியே கொண்டு வர வேண்டும். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். போலீஸ் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறேன். எனவே என்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

The post பாலியல் வழக்கில் சிக்க வைக்க சதித்திட்டம்: கேரள முதல்வர், டிஜிபிக்கு நடிகர் நிவின் பாலி புகார் appeared first on Dinakaran.

Tags : Nivin Pauly ,Kerala CM ,DGP ,Chennai ,Kerala ,Minister ,Culture Minister ,Special Investigation Committee ,
× RELATED துபாயில் கூட்டு பலாத்காரம் செய்ததாக...