சென்னை: சென்னை விமானநிலையத்தில் நேற்று முன்தினம் 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் சோதனையில் அது வெறும் புரளி என தெரியவந்தது. சம்பந்தப்பட்ட சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னை விமானநிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த ஒரு இ-மெயிலில், ‘சென்னை விமானநிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை குறிப்பிட்ட நேரத்தில் வெடித்து சிதறும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபற்றி சென்னை விமானநிலைய இயக்குநர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினருக்கு அலுவலக ஊழியர்கள் அவசர தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் விமான பாதுகாப்பு, ஏர்லைன்ஸ் நிறுவன மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் வழக்கமான புரளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்பட பல்வேறு முக்கியமான இடங்களில் பாதுகாப்பு படை மற்றும் விமானநிலைய போலீசார் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர். மேலும், விமான நிலையத்துக்கு சந்தேக நிலையில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சென்னை விமானநிலையத்தில் கடந்த 2 வாரங்களாக இதேபோல் தொடர்ச்சியாக வெடிகுண்டு புரளிகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுவரை 5 முறை தொலைபேசி மற்றும் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதுவும் புரளியாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் விமான சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அனைத்து விமானங்களும் நேற்று இரவு முதல் வழக்கம போல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதேபோல் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் புரளியை திட்டமிட்டு கிளப்பிவிடும் சமூகவிரோதிகளை கண்டுபிடித்து, அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post சென்னை விமான நிலையத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பு நடவடிக்கை appeared first on Dinakaran.