சென்னை: பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல பெண் புரோக்கர் நதியா உள்பட 4 பேரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் தொடர்பான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய போது, தி.நகரை சேர்ந்த கருக்கா வினோத் தோழியான நதியா வீட்டில் இருந்து 5 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. அந்த செல்போனில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்த போது, அதில் 17 பள்ளி மாணவிகளின் 170க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் சென்னை போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ெசந்தில் குமாரி மற்றும் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் வனிதாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி மற்றும் இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான குழுவினர் அதிரடி விசாரணை நடத்தினர்.
அதில், கருக்கா வினோத்தின் தோழியான நதியா தனது மகள் மூலம் உடன் படிக்கும் பள்ளி மாணவிகளை வீட்டிற்கு அழைத்து வந்து பணம் மற்றும் பொருட்கள் வாங்கி கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
அதைதொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக பிரபல பெண் பாலியல் புரோக்கர் நதியா (37), அவரது சகோதரி சுமதி (46) மற்றும் சிறுமிகளுடன் பாலியலில் ஈடுபட்ட 3 பேர் உள்பட 9 பேரை இந்த வழக்கில் கைது செய்தனர். மேலும் நடந்த புலன் விசாரணையில் பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழில் செய்து வந்த நதியா, அவரது சகோதரி கணவர் ராமச்சந்திரன் (42), நேபாள நாட்டை சேர்ந்த மாய ஒலி (28) மற்றும் பள்ளி மாணவிகள் என்று தெரிந்து பாலியலில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டம் அமனக்கந்தோண்டி கிழக்கு தெருவை சேர்ந்த சர்வீஸ் குடியிருப்பு மேலாளர் தண்டபாணி (36) ஆகிய 4 பேரை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி விபசார தடுப்பு பிரிவு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு பெண் புரோக்கர் நதியா உள்பட 4 பேருக்கு குண்டாஸ்: போலீஸ் கமிஷனர் ரத்தோர் உத்தரவு appeared first on Dinakaran.