பெரியகுளம்: தந்தை வாங்கிய கடனை திரும்ப தராததால் மகளை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான புகாரின் பேரில், வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணி (40) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் மற்றும் சுரேஷிடம் ரூ.1.50 லட்சம் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தேவைக்காக கடன் வாங்கியுள்ளார். விவசாயி திரும்ப கொடுக்காததால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. விவசாயியின் 19 வயது மகள் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாக வில்லை. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இவர், தனது வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது வழக்கறிஞர் மணி மற்றும் அவரது நண்பர்களான பழனி (28). நவநீத் (28), சுரேந்தர் (35), ஹரி (20) ஆகியோர் அந்த இளம்பெண்ணை காரில் கடத்தியுள்ளனர். பின்னர் அவரை காரில் வைத்தே பழனி, நவநீத் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அதை மணி செல்போனில் படம் பிடித்துள்ளார். நடந்த விபரங்களை வெளியே கூறினால், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர் அவரை காரில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தேனி மாவட்ட எஸ்.பி சிவபிரசாத்திடம் சமீபத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமும் போலீசார், ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர். இந்த புகார் மீதான விசாரணை முடிவில் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இன்ஸ்பெக்டர் ஜெயராணி கூறியுள்ளார்.
வழக்கு குறித்து போலீசார் கூறுகையில், ‘‘புகார் அளித்த இளம்பெண் நிறைமாத கர்ப்பிணி என்பதால், யாரால் அவர் கர்ப்பமானார் என்பதை அறிய மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் நாளில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நபர்களின் செல்போன் எண்களின் இருப்பிடம் குறித்த ஆய்விற்காக, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. புகார் கொடுத்த இளம்பெண் வேலை பார்த்த மருத்துவமனையிலும் விசாரணை நடத்தப்பட்டது. பெண்ணின் மருத்துவ அறிக்கை மற்றும் தொலைதொடர்புத்துறை அறிக்கை ஆகியவற்றில், குற்றச்சாட்டுகள் உறுதியானால், அவர்கள் 5 பேரும் கைது செய்யப்படுவார்கள். மேற்கண்ட அறிக்கைகளில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படாத நிலையில், பிறக்கும் குழந்தை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும்’’ என்றனர்.
The post தந்தை வாங்கிய கடனை தராததால் மகளை கடத்தி காரில் பலாத்காரம்: வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.