செங்கல்பட்டு, மே 24: செங்கல்பட்டு அடுத்த பரனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பதுங்கியிருந்த 2 விஷப் பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். செங்கல்பட்டு அடுத்த பரனூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(36). இவர் கொங்கனாஞ்சேரி பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கண்ணன் நேற்று வழக்கம்போல் சூளையில் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, இரண்டு கொடிய விஷம் கொண்ட பாம்புகள் சூளையில் செங்கற்களுக்கு இடையே பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, செங்கல் சூளையில் வேலை செய்துகொண்டிருந்த மற்ற பணியாளர்களிடம் விஷப் பாம்புகள் இருப்பதாக தெரிவித்தார். பாம்புகள் இருப்பதைக்கண்ட பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து, கண்ணன் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், செங்கல்பட்டு தீயனைப்புதுறை மாவட்ட உதவி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தீயனைப்பு வீரர்கள் செங்கல் சூளைக்கு விரைந்து வந்தனர். சூளையில் செங்கற்களுக்கு இடையே பதுங்கி இருந்த 4 அடி நீளம் கொண்ட 2 விஷப் பாம்புகளை லாவகமாக பிடித்துச் சென்று செங்கல்பட்டு வனப்பகுதியில் விட்டுச் சென்றனர்.
The post செங்கல்பட்டு அடுத்த பரனூரில் செங்கல் சூளையில் பதுங்கிய விஷ பாம்புகள் பிடிப்பட்டன appeared first on Dinakaran.