ஸ்ரீபெரும்புதூர், நவ.5: பென்னலூர் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பென்னலூர் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பென்னலூர் ஊராட்சியை சுற்றி ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த, தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், பென்னலூர் பகுதியில் தங்கியுள்ளனர்.இதனால், இந்த ஊராட்சியில் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பென்னலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு செல்ல ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் சாலையையும், பூந்தமல்லி வழியாக சென்னைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கபட்டது. தற்போது, நெடுஞ்சாலையை இணைக்கும் பென்னலூர் சாலை குண்டும், குழியுமாக மாறிய போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஜல்லிகற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post குண்டும், குழியுமான பென்னலூர் சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.