×
Saravana Stores

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பியதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் மக்கள் அவதி

செங்கல்பட்டு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இன்று சென்னைக்கு திரும்பினர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். தீபாவளி பண்டிகை கடந்த 31ம் தேதி குதூகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு அரசு, தனியார் பஸ், ரயில்கள், கார்களில் என கூட்டம் கூட்டமாக சென்றனர்.

அவர்கள், தங்களது உறவினர்கள், நண்பர்களுடன் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர். 4 நாட்கள் விடுமுறையை சொந்த ஊர்களில் கழித்து விட்டு நேற்று முதல் பலரும் சென்னை நோக்கி திரும்பிய வண்ணம் இருந்தனர். நேற்றிரவும் ஏராளமானோர் சென்னைக்கு புறப்பட்டதால் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இன்று அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இயங்க தொடங்கியது. அதனால் தென்மாவட்டங்களான நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து கார், அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏராளமானோர் சென்னைக்கு புறப்பட்டனர்.

அதனால் பல இடங்களில் இன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நின்றன. இதனால் பரனூர் பாலம் அருகே கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நோக்கி திருப்பி விடப்படுகின்றன. கார்கள், பஸ்கள் மட்டும் சென்னையை நோக்கி பயணிக்கின்றன. மதுராந்தகம் சுங்கச்சாவடியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கு 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதேபோல் சிங்கபெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் சாலை, மேம்பாலம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன. சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை காவேரிபாக்கம் சாலையிலும் நெரிசல் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நெரிசலால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

தாம்பரம்: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு மின்சார ரயில்கள் காட்டாங்கொளத்தூரில் இருந்து இன்று அதிகாலை 4 மற்றும் 4.30, 5 மற்றும் 5.45, 6.20 ஆகிய நேரங்களில் தாம்பரத்துக்கு இயக்கப்பட்டது. இந்த ரயில்கள் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச்சென்றது. அதுபோல் தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.05 மற்றும் 5.40 மணிக்கு காட்டாங்கொளத்தூருக்கு 2 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு மின்சார ரயில்கள், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வந்த அந்தியோதயா சிறப்பு ரயில் மற்றும் வழக்கமாக வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் என அனைத்திலும் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

இன்று காலை ஏராளமான பொதுமக்கள் தாம்பரம் பகுதிக்கு வந்ததால் தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், ஜிஎஸ்டி சாலை என பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகத்திற்கு மின்சார ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் செல்வதற்காக வந்தவர்கள் ஏற்கனவே ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இருந்த கூட்டத்தினால் கடும் சிரமப்பட்டனர். போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய ஜிஎஸ்டி சாலை முழுவதும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

The post தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பியதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Paranur toll booth ,Diwali ,Chennai ,Chengalpattu ,Paranur toll plaza ,Dinakaran ,
× RELATED தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற...