×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கூட்டுறவு இணைப்பதிவாளர் தகவல்

காஞ்சிபுரம், நவ.10: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்காக மானியம் பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெய தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெய வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் 15.08.2024 சுதந்திர தினவிழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm /D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மருந்தகம் அமைக்க ww.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் வரும் 20ம்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு (10Sqm) குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி ரசீது (அல்லது) குடிநீர் வரி ரசீது (அல்லது) மின் இணைப்பு ரசீது இருக்க வேண்டும். வாடகை இடம் எனில் இடத்திற்கான உரிமையாளரிடம் ஒப்பந்தப் பத்திரம் (Rental Agreement Documents) பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ₹3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.

தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். TABCEDCO, THADCO மற்றும் TAMCO பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை ₹1.50 லட்சம் விடுவிக்கப்படும். முதல்வர் மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்படும் தொழில்முனைவோர், முதல்வர் மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதி கட்ட மானியம் ₹1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கூட்டுறவு இணைப்பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,District ,Chief Minister ,Coordinator ,Jaya ,Kanchipuram district ,Jaya ,Tamil Nadu ,Independence Day ,
× RELATED கடப்பாக்கத்தில் சமத்துவ பொங்கல் விழா...