×
Saravana Stores

நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

*பொதுமக்கள் அதிர்ச்சி

நாகப்பட்டினம் : நாகூர் ஆண்டவர் தர்கா குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டும் இன்றி அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வழிபடும் முக்கிய வழிபாட்டு தலமாகவும் அமைந்துள்ளது. இந்த தர்காவிற்கு வரும் பக்தர்கள் மொட்டையடித்து தர்காவிற்கு பின்புறம் உள்ள குளத்தில் புனித நீராடி நாகூர் ஆண்டவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நாகூர் ஆண்டவர் தர்கா குளத்தில் இருந்த ஏராளமான மீன்கள் நேற்று திடீரென செத்து மிதந்தது. குளத்தில் மீன்கள் சொத்து மிதப்பதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குளத்தில் உள்ள தண்ணீர் நிறம் பச்சையாக மாறி நான்கு புறத்திலும் குவியல் குவியலாக மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் நாகூர் ஆண்டவர் தர்கா குளம் மேற்கு, வடக்கு, தெற்கு, நூல்கடை தெரு, கலீபா சாஹிப் தெரு உள்ளிட்ட தெருக்கள் மட்டுமில்லாமல் 1 கிலோ மீட்டர் தூரம்வரை துர்நாற்றம் வீசுகிறது.

இதை அறிந்த நாகூர் ஆண்டவர் தர்கா தலைமை அறங்காவலர் காஜி ஹுசைன்சாஹிப் தலைமையில் தர்ஹா நிர்வாகிகள் குளத்தில் இறங்கி ஆய்வு செய்தனர். பின்னர் 10 மீனவர்கள் உதவியுடன் சிறிய படகுகளை வைத்து செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் கொடுமையாக இருந்ததால் இந்த தர்கா குளத்தில் மீன்கள் செத்து மிதக்கிறது. மீன்களை அப்புறப்படுத்தும் பணி ெதாடர்ந்து நடை பெறுகிறது. விரைவில் குளம் தூய்மை செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என நாகூர் ஆண்டவர் தர்கா தலைமை அறங்காவலர் தெரிவித்தார்.

The post நாகூர் தர்கா குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Nagor Darga pond ,Nagapatnam ,Andavar Dargah ,Nagor ,Nagapatnam District Nagor ,
× RELATED நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி...