×

தேனி துவங்கி ராமநாதபுரம் வரை வைகையாற்றில் 177 இடங்களில் கழிவுநீர் கலப்பு

Vaigai Dam, Vaigai River, madurai, Theni, Sivaganga, Ramnathapuram
*நூற்றுக்கணக்கான உயிரினங்களுக்கு ஆபத்து
*உயிர்ச்சூழல் தொடர்பான ஆய்வறிக்கை தாக்கல்

மதுரை : தேனி மூல வைகை துவங்கி ராமநாதபுரம் வரையிலான வைகையாற்றில் 177 இடங்களில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. 5 இடங்களில் நீர் மாசடைந்துள்ளதாக உயிர்ச்சூழல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த ரவீந்திரன், தமிழ்தாசன், கார்த்திகேயன், விஸ்வநாத் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம், வருசநாடு மலைப்பகுதி, வாலிப்பாறை கிராமத்தில் உள்ள மூல வைகையில் இருந்து வைகையாறு கடலில் கலக்கும் கழிமுக பகுதியான ராமநாதபுரம் மாவட்டம், ஆற்றங்கரை பகுதி வரை கடந்த செப்டம்பரில் 10 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களது ஆய்வு முடிவினை மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதாவது, தென்மேற்கு பருவமழையின் முடிவில், வைகையாற்றில் தண்ணீர் ஓடும்போது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் 200 ஊர்களை பட்டியலெடுத்து, அதில் 134 ஊர்களுக்கு நேரில் சென்று களஆய்வு செய்யப்பட்டது. ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாலூட்டி வகை காட்டுயிர்கள்:
மூலவைகையின் அடர்ந்த வனப்பகுதியில் அழிந்து வரும் பட்டியலில் உள்ள ஆற்று நீர்நாய்கள் வாழ்கின்றன. இங்குள்ள மான்கள், கீரிகள் உள்ளிட்ட 35 வகையான பாலூட்டி வகை காட்டு விலங்குகளில், அழிந்து வரும் 16 வகை காட்டுயிர்களும் அடங்கும்.

தாவரங்கள்:
67 வகையான தாவரங்கள் கண்டறியப்பட்டன. இதில் 45 வகை மரங்கள், 6 வகை செடிகள், 3 வகை கொடிகள், 4 வகை புற்கள், 2 வகை நீர்தாவரங்கள், 4 வகை அலையாத்தி காட்டு தாவரங்களாகும். மதுரை நகர் வைகைக் கரைகளில் 8 கிமீ தூர ஆற்றங்கரையில் மரங்களே இல்லை. ஆற்று நன்னீரில் காணப்படும் காஞ்சி மரங்கள் துவரிமான் பகுதியில் மட்டுமே உள்ளது. நகரில் நாணல் புற்கள், பேய்க்கரும்பு புற்கள் இல்லை. தேனி முதல் துவரிமான் வரை, திருப்புவனம் துவங்கி மந்திவலசை வரை நாணற்புற்கள் உள்ளன. மாசுபட்ட நீரில் வளரும் சம்பை புல், ஆகாயத்தாமரை மதுரை நகரில் காணப்படுகிறது.

பறவைகள்:
175 வகை பறவைகள் காணப்படுகின்றன. இதில் 12 வகை அழிந்து வருபவையாகும். 125 வகை ஆறு சார்ந்து வாழ்பவை. 50 வகை வலசை பறவைகளும் உள்ளன. வெண்கொக்குகள், செந்நாரைகள் உள்ளிட்டவைகள் எண்ணிக்கை குறைந்துள்ளன. கழிவு நீரில் வாழும் நாமக்கோழி, அரிவாள் மூக்கன் பறவைகள் மதுரையில் அதிகரித்திருக்கின்றன.

நன்னீர் மீன்கள்:
58 வகையான நன்னீர் மீன்கள் கண்டறியப்பட்டதில் 11 வகை அழிவை சந்திக்கும் பட்டியலிலும், 11 வகை அயல் மீன்கள் உள்ளன. பாக் நீரிணைப் பகுதியில் வங்க கடலும், வைகையும் ஒன்று சேரும் கழிமுகப் பகுதியில் மீன்கள், இறால்கள், திருக்கை உள்ளிட்ட 36 வகை உயிரினங்கள் உள்ளன. சுத்திகரிப்பின்றி ராமநாதபுரம் மாவட்ட ஆற்றுப்பகுதி இறால் பண்ணைகளின் கழிவுநீர் ஆற்றில் விடுவதும் உயிர்ச்சூழலை பாதிக்கிறது.

ஆற்றின் மணல் பரப்பு:
தேனி அம்மாச்சியாபுரம் துவங்கி அணைக்கரைப்பட்டி வரை, மதுரை விளாங்குடி துவங்கி சிலைமான் வரை ஆற்றுமணல் பரப்பு இல்லை.

கழிவுகள் கலக்குமிடங்கள்:
தேனி வாலிப்பாறை முதல் ராமநாதபுரம் ஆற்றங்கரை வரை சுமார் 177 இடங்களில் 197 குழாய்கள் மூலம் வைகையாற்றுக்குள் கழிவு நேரடியாக கலக்கப்படுகிறது. தேனியில் 18, திண்டுக்கல்லில் 2, மதுரையில் 64, சிவகங்கையில் 29, ராமநாதபுரத்தில் 64 இடங்கள் என மொத்தம் 177 இடங்கள் கண்டறியப்பட்டன. குப்பைகளும் ஆற்றில் கொட்டப்படுகிறது.

நீர் தரமதிப்பீடு:
இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீரின் தரத்தை, ஏ) குடிக்கலாம், பி) குளிக்கலாம், சி) சுத்திகரிப்பு செய்து குடிக்கலாம், டி) கால்நடைகள், மீன்கள் வளர்ப்பிற்கும் பயன்படுத்தலாம், இ) நீர் வேளாண்மை, தொழிற்சாலை உற்பத்திக்கு பயன்படுத்தலாம் என ஐவகையாக குறிப்பிடுகிறது. வைகையாற்றின் 36 இடங்களில் (ஓடும் நீரில்) நீர் மாதிரிகள் பரிசோதித்ததில் ஒன்று கூட ஏ,பி,சி வகை நீர் தரத்தில் இல்லை. 36ல் 8 நீர்மாதிரிகள் டி வகை, 23 வகை இ வகை, 5 நீர்மாதிரிகள் இ வகைக்கும் கீழான தரத்தில் இருக்கின்றன.

பழமைக் கோயில்கள்:
கரையோரத்தில் ஒரு கிமீ எல்லைக்குள் 78 பழமைக் கோயில்கள் உள்ளன. இதன் தல மரங்கள், பழமை மரங்கள் 24 வகை கண்டறியப்பட்டன. மேலும் 26 படித்துறைகள், 7 மண்டபங்கள், 3 அணைகள், 2 சத்திரங்கள், ஒரு தெப்பக்குளம் உள்ளிட்ட பழைய கட்டுமானங்கள் இருக்கின்றன.

திருவிழாக்கள்:
சித்திரை திருவிழா, புட்டு திருவிழா, திருமஞ்சம் நீராட்டு, ஆடிப்பெருக்கு நீராடல், ெஜனகை மாரியம்மன் அம்பு போடுதல் திருவிழா, மாரியம்மன் தெப்ப திருவிழா, முளைப்பாரி கொட்டுதல், புரவி எடுத்தல், நீர்மாலை எடுத்தல், திதி கொடுத்தல் உள்ளிட்ட திருவிழாக்கள், சடங்குகள் வைகையற்று நீரை சார்ந்து இன்றும் நிகழ்கின்றன. இதில், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விலான சித்திரைத்திருவிழா மதுரை உள்ளிட்ட 16 இடங்களிலும் நிகழ்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்

வைகையாற்று பகுதிகளில் பன்னாட்டு ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அழியும் நிலையில் உயிரினங்கள் காணப்படுவதால், அவற்றை பாதுகாக்க அரசு சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். நாமக்கோழி, அரிவாள் மூக்கன் பறவைகள் காணப்படுவதும், ஆறு பயணிக்கும் திசையில் சம்பை புல், ஆகாயத்தாமரை காணப்படுவதால், ஆற்று நீர் மாசுபட்டுள்ளது. அதேபோல், வைகை ஆறும் – வங்க கடலும் இணையும் கழிமுக பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றுக்குள் விடப்படுவதும், அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. வருசநாடு மலைக்கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் நேரடியாக மூலவைகை ஆற்றில் கொட்டப்படுகின்றன. கழிவுநீர் கலக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

வைகை சீரமைப்பு திட்டத்திற்கு தனிக்குழு

வைகையை சீரமைக்க ‘வந்தாரை வாழ வைக்கும் வைகையே வா’ திட்டத்திற்கான முதற்கட்ட அறிக்கை, வைகை நதி மற்றும் கிளை நதிகள் மீட்டெடுப்பு திட்ட வடிவமைப்பாளரும், பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமை பொறியாளருமான பைந்தமிழ்செல்வனால் தயாரிக்கப்பட்டு அதற்கு, ரூ.5,510 கோடி செலவாகும் என, கணிக்கப்பட்டுள்ளது. அதில், ஆறு பயணிக்கும் திசையில் அமைய வேண்டிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் துவங்கி பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கரைகளை பலப்படுத்த தேவையான தடுப்புச்சுவர், கிளை நதிகள் சந்திக்கும் இடங்களில் அமைய வேண்டிய பூங்காக்கள் மற்றும் வளைவு பகுதிகள், படித்துறை மற்றும் மயானங்களின் நீளம், அகலம் மற்றும் அவற்றின் அமைவிடங்கள் குறித்த, அம்சங்கள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, நீர்வளத்துறையின் பெரியாறு- வைகை வடிநிலக்கோட்ட பொறியாளர்கள் குழுவினரிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு பணிகளுக்கு இடையில் அதிகாரிகள் அப்பணிகளை மேற்கொண்டிருந்தாலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதில் காலதாமதமும் ஏற்படுகிறது. அரசு இப்பணிக்கென தனிக்குழுவை நியமித்தால் திட்ட அறிக்கையும் வேகமாக தயாராகும். அதை வைத்து, ஒன்றிய அரசிடம் நிதி பெற்று நதியை சீரமைக்கும் பணிகளையும் துவக்கலாம்.

The post தேனி துவங்கி ராமநாதபுரம் வரை வைகையாற்றில் 177 இடங்களில் கழிவுநீர் கலப்பு appeared first on Dinakaran.

Tags : Theni ,Ramanathapuram ,Vaigaya ,Madurai ,Vaigai River ,Theni Mula Vaigai ,Vaigayayar ,
× RELATED தேனியில் தடையை மீறி போராட்டத்திற்கு புறப்பட்டவர்கள் மீது வழக்கு