*திருவாரூர் அருகே போலீஸ் அதிரடி சோதனை
மன்னார்குடி : திருவாரூர் அருகே யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தான விவசாய பண்ணையில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கன்டெய்னர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.தமிழக பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த யூடியூபர் சங்கர், கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தேனியில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுவரை 7 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சங்கர், கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் சங்கர் பேசிய நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி தனிப்படை போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்டார். மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.தொடர்ந்து, சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் திருச்சி போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், பெலிக்ஸ் ஜெரால்டு தொடர்புடைய பல்வேறு இடங்களில் நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதில் ஒருபகுதியாக, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட திருராமேஸ்வரம் அடுத்த கோட்டகச்சேரி கிராமத்தில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான விவசாய பண்ணை மற்றும் அவர் தங்குவதற்காக நிறுத்தப்பட்டுள்ள கண்டெய்னர் அறையில் திருச்சி துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்றிரவு 8.30 மணியளவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி ஜேன் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் இருந்தனர். சோதனை நடந்த இடத்தில், திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன், கூத்தாநல்லூர் இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குளுகுளு அறை
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அடுத்த தேவதானம் என்ற கிராமம் தான் பெலிக்ஸ் ஜெரால்டின் பூர்வீக கிராமம் ஆகும். பள்ளி படிப்பிற்கு பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்வார். சொந்த ஊரில் சொந்தமாக பண்ணை வீடு ஒன்றை கட்ட விரும்பிய பெலிக்ஸ் ஜெரால்டு, அதற்காக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கூத்தாநல்லூர் அடுத்த கோட்டகச்சேரி கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை தனது மனைவி பெயரில் வாங்கினார்.
பின்னர், அந்த நிலத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை பயிரிட்டுள்ளார். அந்த நிலத்தில் கண்டெய்னர் ஒன்றில் அறை ஒன்றை அமைத்துள்ளார். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சொகுசு அறையில் அவ்வப்போது தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த கண்டெய்னர் அறையிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
The post யூடியூபர் பெலிக்ஸ் பண்ணையில் சொகுசு கன்டெய்னர் சிக்கியது appeared first on Dinakaran.