பெரம்பூர்: சென்னை ஓட்டேரி பட்டாளம் சூரத் பவன் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார் (21). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 29ம் தேதி இரவு இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அது காணாமல் போயிருந்தது. இதுகுறித்து சஞ்சய் குமார் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புளியந்தோப்பு சரக உதவி கமிஷனர் ராஜாவின் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வண்ணாரப்பேட்டை பகுதியில் வைத்து புளியந்தோப்பு பிஎஸ் மூர்த்தி நகரைச் சேர்ந்த மனோஜ்குமார் (25) என்ற வாலிபரை கைது செய்தனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இவர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது. இவரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமை காவலர் மகேந்திரன் உள்ளிட்டோர் பாதுகாப்பிற்காக சென்றனர். புளியந்தோப்பு நெடுஞ்சாலை, செங்கை சிவம் மேம்பாலம் சந்திப்பு பகுதியில் ஆட்டோ வந்தபோது மனோஜ்குமார் பசிப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு தலைமை காவலர் மகேந்திரன் ஸ்டீபன்சன் ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென ஆட்டோவில் இருந்த மனோஜ்குமார் தப்பித்து ஓடிவிட்டார். போலீசார் அவரை பிடிக்க முற்பட்டபோதும் பிடிக்க முடியவில்லை. போலீசார் தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில், நேற்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மனோஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், எனக்கும் திருட்டு வழக்குக்கும் சம்பந்தமில்லை, என்னை ஏன் கைது செய்தீர்கள், அதனால்தான் நான் தப்பித்து ஓடினேன் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் மீது மேலும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கைதி தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.