×
Saravana Stores

செங்கல்பட்டு கலெக்டர், எம்எல்ஏ வரிசையில் நின்று வாக்களிப்பு: பொதுமக்கள் ஆர்வம்

செங்கல்பட்டு, ஏப்.20: செங்கல்பட்டில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதன் ஆகியோர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்குட்பட்ட செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். செங்கல்பட்டு நகராட்சியில் அனுமந்தபுத்தேரி நகராட்சி பள்ளியில் கலெக்டர் அருண்ராஜ், தனது வாக்கை பதிவு செய்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆப்பூர் ஊராட்சி நடுநிலை பள்ளியில் வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, தனது வாக்கை பதிவு செய்தார்.

மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல், தையூர் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இள்ளலூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், துணை தலைவர் சத்யா சேகர் பையனூர் வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர். பெரும்புதூர் தொகுதியில் அடங்கிய பெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மாவட்ட எஸ்பி சாய்பிரணீத் தலைமையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஒருசில இடங்களில் பூத் ஏஜெண்டுகள் உரிய நேரத்துக்கு வராததால், அவர்கள் முன்னிலையில் நடக்க இருந்த மாதிரி வாக்குப்பதிவு காலதாமதமானது. இதனால் ஒருசில இடங்களில் காலை 7.30 மணிக்கு மேலாகியும் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம், இசிஆர் சாலையில் உள்ள படகு குழாம் உள்பட அனைத்து பொழுதுபோக்கு மையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன. மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் ஓட்டு போட்ட மை விரலை காட்டியவர்களுக்கு உணவு பொருட்களின் மொத்த விலையில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தலைமையில் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காஞ்சிபுரம், பெரும்புதூர் உள்பட ஒருசில இடங்களில் பெண்கள் மட்டுமே வேலைபார்க்கும் வாக்குப்பதிவு மையங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக, வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பெண் உதவியாளருடன் சாய்தள நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டதால் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்டு தங்களது வாக்குகளை செலுத்தினர்.

The post செங்கல்பட்டு கலெக்டர், எம்எல்ஏ வரிசையில் நின்று வாக்களிப்பு: பொதுமக்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Collector ,MLA ,Chengalpattu ,District Collector ,Arunraj ,Varalakshmi Madhusuthan ,Kanchipuram ,Separate ,Tiruporur ,Seyyur ,Madhuranthakam ,Uttaramerur… ,Dinakaran ,
× RELATED மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...