×

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானம்: செங்கல்பட்டு கலெக்டர் அஞ்சலி


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம், பெத்தேல் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ராஜா (30). இவர், செங்கல்பட்டில் ஒரு தனியார் செல்போன் கடையில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி நித்யா மற்றும் ஒன்றரை வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளனர். இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் ராஜா வேலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக ரத்தவாந்தி எடுத்துள்ளார். அவரை மனைவி மற்றும் பெற்றோர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு ராஜாவை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தில், ராஜாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதால் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியான மனைவி நித்யா மற்றும் ராஜாவின் பெற்றோர் சோகத்தை மனதில் வைத்து, ராஜாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க சம்மதிக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதன்பேரில், நேற்று ராஜாவின் கண் உள்பட பல்வேறு உடல் உறுப்புகள் அரசு விதிகளின்படி தானமாக வழங்கப்பட்டன. பின்னர் நேற்று மாலை நடைபெற்ற ராஜாவின் இறுதிச் சடங்கில், அவரது உடலுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, அரசு சார்பில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

The post மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானம்: செங்கல்பட்டு கலெக்டர் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,District Collector ,Arunraj ,Kumar ,Alapakkam, Bethel ,Chengalpattu Collector ,
× RELATED உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்...